மறுபிறவி எடுத்துள்ளேன் - கையெழுத்துடன் ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை

Asianet News Tamil  
Published : Nov 14, 2016, 10:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
மறுபிறவி எடுத்துள்ளேன் - கையெழுத்துடன் ஜெயலலிதா பரபரப்பு அறிக்கை

சுருக்கம்

மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரேட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட அவரது உடல்நிலை தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் தேதியை அவரே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் பிரார்த்தனையால் நான் மறு பிறவி எடுத்துள்ளேன். உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை. விரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன் என மருத்துவமனையில் இருந்தபடி அறிக்கை மூலமாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் மீது மிகுந்த அன்பும் பற்றும் அக்கறையும் கொண்டு தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் நான் மறுபிறவி எடுத்துள்ளேன்.
உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை..!

இறைவனின் அருளால் நான் வெகு விரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன்.

நான் பொதுவாழ்வுக்கு வந்த நாள் முதல் தமிழக மக்களுக்காகவும் அதிமுகவின் வளர்ச்சிக்காகவும் நொடிப் பொழுதும் சலிப்பில்லாமல் பாடுபட்டு வருகிறேன்.

தொண்டர்கள் சிலர் அன்பு மிகுதியால், உயிரையே மாய்த்துக் கொண்டனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையுற்றேன். இப்போது அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வருகிற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற நீங்கள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என இந்த அறிக்கை மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் தொகுதியில் வாழும் வாக்காளர்களையும், கட்சி நிர்வாகிகளையும் என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை என்றபோதும், என்னுடைய எண்ணமும், இதயமும் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கின்றன.

எனது இந்த அறிக்கையின் இயல்பைப் புரிந்துகொண்டு இரட்டை இலைச் சின்னம் வெற்றிபெற கடமை உணர்வோடு பணியாற்றுங்கள். அதிமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மனதில் கொண்டு, உங்கள் அன்பையும், ஆதரவையும் அதிமுகவுக்கு வழங்க வேண்டும்.

கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொருவரும், அதிமுக வெற்றியே தமது வெற்றி என்ற லட்சிய வேட்கையோடு, கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கடமை உணர்வோடு பணிகளை ஆற்றிட வேண்டும். அதிமுக வெற்றி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் அமைந்திட வேண்டும். அத்தகைய வெற்றிச் செய்திக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வாய்ப்பை தவறவிடாதீர்கள்! தாட்கோ கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு! அப்பல்லோ மருத்துவமனையில் வேலை.. ரூ.5,000 உதவித்தொகை!
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!