சங்கர் ஆணவ கொலை வழக்கு.. என் அம்மா உட்பட 3 பேருக்கும் தண்டனை வாங்கி கொடுக்காம ஓயமாட்டேன்..! கௌசல்யா உறுதி..!

First Published Dec 15, 2017, 1:09 PM IST
Highlights
kausalya is strong to punish the three who released in sankar murder case


உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தனது தாய் உட்பட மூவருக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக சங்கரின் மனைவி கௌசல்யா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரியும் பழனியை சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். 

கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் கொலை செய்த மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கர் கொலை வழக்கின் விசாரணை, திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவந்தது. கடந்த 12ம் தேதி கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால், சந்தேகத்தின் பலனில் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்ன குமார் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சங்கரின் மனைவி கௌசல்யா, சங்கர் ஆணவ கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மூவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விடமாட்டேன். அவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் என தெரிவித்தார்.

ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும். எனது சாதி ஒழிப்புப் போராட்டம் தொடரும். குழந்தையிலிருந்தே சாதி வெறுப்பை ஊட்டி வளர்க்க வேண்டும். வேர் வலுவாக இருந்தால்தான் மரமும் வலுவாக இருக்கும். எனவே சாதி வெறுப்பை சிறு வயதிலிருந்தே விதைக்கும் பணியை மேற்கொள்வேன் என கௌசல்யா தெரிவித்தார்.

எனது கணவர் சங்கரின் தம்பியுடன் நிற்கும் புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பரவவிட்டு என்னை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். என்ன ஏது என்பது தெரியாமல், ஒரு புகைப்படத்தை வைத்து அவதூறு பரப்பும் அளவிற்கு சமூக வலைதளவாசிகள் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என கௌசல்யா வருத்தம் தெரிவித்தார்.
 

click me!