பொன்னை ஆற்று பாலம் விரிசல்..தொடரும் சீரமைப்பு பணி.. புதிதாக மேலும் 2 தூண்களில் விரிசல்..?

By Thanalakshmi VFirst Published Dec 26, 2021, 1:45 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேலும் 2 தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 

வேலூர் மாவட்டம், திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கட்டப்பட்ட ரயில்வே பாலத்தில் 38 மற்றும் 39-வது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக இவ்வழியாக செல்லும் ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், 3 நாட்களில் மட்டும் 65 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் ஓரிரு நாளில் இந்த தடத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிசல் ஏற்பட்ட பாலத்தை ஆய்வு செய்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், பொன்னை ஆற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில்வே பாலம் பழுதடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பொன்னை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் சீரமைப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் ரயில்வே பாலத்தின் சீரமைப்புப் பணிகள் 60 விழுக்காடு வரை நிறைவு பெற்றிருப்பதாகவும் பணிகள் முழுமையாக முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சேதமான பாலத்தின் 39-ஆவது தூணை சுற்றி, 3 அடி ஆழத்திற்கு சிமெண்ட் கலவை மூலம் கான்கிரீட் போடப்பட்டு தூண் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விரிசல் ஏற்பட்ட தூண்களுக்கு இடையே தற்காலிகமாக இரும்பு கட்டுமானம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விரிசல் உள்ள பகுதிகளில் இரும்பு குழாய் பொருத்தப்பட்டு, அதன் வழியாக சிமெண்ட் கலவையை செலுத்தி பாலத்தை உறுதியாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், விரிசல் ஏற்பட்டுள்ள 38 மற்றும் 39 ஆவது தூண்களுக்கு அருகில் உள்ள மேலும் இரு தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ள தூண்களை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தொழில்நுட்ப வல்லுனர் குழு, பாலத்தை ஆய்வு செய்துள்ளதாகவும் பாலத்தை விரைவில் மீட்டெடுக்கவும், கட்டமைப்பு சேதத்தை சரிசெய்யவும், வேக கட்டுபாடுகளுடன் இரு வழித்தடங்களிலும் ரெயில் போக்குவரத்தை மேற்கொள்ளவும் அனைத்து முயற்சிகளும் நடந்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே இதற்கான அறிவிப்புகளும் பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுவிட்டது. 

இன்னும் ஓரிரு நாளில் பாலம் சரிசெய்யப்பட்டு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூரில் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல்  காரணமாக  ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளாக விரிசலை சரி செய்யும் பணிகள் தொடர்வதால், இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டு, மற்ற ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. 

click me!