
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்திற்குப் பிரச்சாரத்திற்காக வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணையை முழுமையாக மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றி நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்திருந்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
இந்த இரு விசாரணைகளையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்கு முன் சிறப்புப் புலன் விசாரணைக் குழுவோ அல்லது விசாரணை ஆணையமோ நியமனம் செய்யப்பட்டிருந்தால், அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமாரிடம் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று ஒப்படைத்தனர். சிபிஐ விசாரணை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.