தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது
தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பிரச்சினை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் கர்நாடகா அரசு செயல்படுத்துவதில்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட அம்மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காவிரி நீரை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இதனிடையே, காவிரிப் படுகையில் பருவமழை பற்றாக்குறையால் வறட்சி போன்ற நிலைஅமி சென்றுள்ளதாக வாதிட்ட கர்நாடக அரசின் எதிர்ப்பையும் மீறி அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மேலும் 16 நாட்களுக்கு தமிழகத்திற்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
undefined
டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88ஆவது கூட்டத்திற்கு உறுப்பினர் செயலாளர் டி.டி.ஷர்மா தலைமை தாங்கினார். இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, பருவமழை பற்றாக்குறை ஆண்டில், கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை விநியோகிக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினர் வினீத் குப்தா கூறினார்.
பற்றாக்குறை நீரை உடனடியாக முறைப்படி கர்நாடகா பகிர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கணக்கீட்டின்படி, 2023ஆம் ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 16.248 டிஎம்சி நீர் பற்றாக்குறையாக இருப்பதாகவும் தமிழ்நாடு சுட்டிக்கட்டியது.
ஆனால், பருவமழை பொய்த்ததால் நீர் தேக்கங்களில் போதிய தன்ணீர் இல்லை எனவும், நீர் வரத்து 50 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் கர்நாடகா வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.
முன்னதாக, செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அக்டோபர் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி தண்ணீரைத் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. இதனை அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து: உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்த தன்னார்வலர்கள்!
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெங்களூருவில் ஓரிரு முறை குறைவான அளவில் மழை பெய்துள்ளது. ஆனால், பிலிகுண்டுலுவில் போதுமான மழை இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவை எதிரித்து மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றார். மாநில நீர்த்தேக்கங்களில் 8,000-9,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம். மழை பெய்யாததால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றும் அவர் கூறினார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் பம்ப் செட்களை இயக்க முடியாமல் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால், மின் பற்றாக்குறை நிலவுகிறது. எரிசக்தித்துறை அமைச்சர் கே.ஜே ஜார்ஜ், மத்திய மின் துறை அமைச்சரை சந்தித்து, மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கக் கோரியுள்ளார் என்றார்.