
தஞ்சாவூர்
கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள்தான் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க தடையாக உள்ளனர். கர்நாடக மக்கள், தமிழக மக்களுடன் சகோதரர்களாகவே பழகுகின்றனர் என்று அகில இந்திய தஞ்சை மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார் நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த காவிரி நதிநீர் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று இறுதி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் டெல்டா பாசன விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்.
தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைக்கூட கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறியவர்கள்தான் கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள்தான், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு தடையாக உள்ளனர். அதே நேரத்தில் கர்நாடக மக்கள், தமிழக மக்களுடன் சகோதரர்களாகவே பழகி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கீழ்பவானி, மேட்டூர், அமராவதி, கர்நாடகாவில் உள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர், கேரளாவில் உள்ள பாணசுரசாகர் ஆகிய எட்டு அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வர வேண்டும்.
கடந்த ஆறு ஆண்டுகளாக காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா, தாளடி ஆகியவை பொய்த்துப்போய் விட்டது. எனவே இந்த ஆண்டாவது குறுவை மற்றும் சம்பா, தாளடி ஆகியவை நடைபெறுமா? என்று காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எனவ, மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.