
நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றியவர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட நிறைய நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2015 ஆம் ஆண்டு நீதிபதி கர்ணன், பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். நீதிபதி கர்ணனின் இந்த செயல், நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது.
எனவே உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனுக்கு மனநலம் குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், கர்ணன் இதற்கும் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி கர்ணனை, கைது செய்ய உத்தரவிட்டது. கைது உத்தரவை திரும்பப்பெறக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தி மனு ஒன்று அளிக்கப்பட்டது.
நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கர்ணன் தரப்பு வழக்கறிஞர்களின் கோக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி கர்ணன் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினர்.