
உச்சநீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் கைது ஆவாரா? காலஹஸ்தி கோயிலுக்கு சென்றிருக்கும் அவர் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஆரம்பம் முதலே நீதி துறையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நீதிபதி கர்ணன்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது தலைமை நீதிபதி அமர்வு முன்பு தானாக ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவர் நீண்ட போராட்டத்துக்கு பின் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு சென்றார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்திய கர்ணன் சுவொமோட்டாவாக வழக்கை எடுத்தார். இது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து கர்ணனுக்கு எதிராக உத்தரவிட்டனர்.
பின்னர் கர்ணன் மனநிலையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களுக்கு ஒத்துழைக்க கர்ணன் மறுத்தார்.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதை அடுத்து அவருக்கு ஆறு மாதம் சிறைவாசம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதனால் கைது நடவடிக்கையை தவிர்க்க கர்ணன் சென்னை வந்தார். அவரது உத்தரவை வெளியிட ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் உதவி ஆணையர் தலைமையில் சென்னை வர இருந்த நிலையில் இன்று சென்னை போலீசார் பாதுகாப்புடன் காளஹஸ்தி கோவிலுக்கு கர்ணன் சென்றுள்ளார்.
இன்று மாலை அவர் சென்னை திரும்புகிறார். அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வரவாய்ப்புள்ளது. கைது செய்தால் அதற்கு நீதிபதி கர்ணன் ஒத்துழைப்பு அளிப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேலை கைதுக்கு ஒத்துழைத்தால் இங்குள்ள மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர் படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று கொல்கத்தா அழைத்து செல்வார்கள் என தெரிகிறது.