
சென்னையின் புதிய மாநகர காவல் ஆணையராக கரன்சின்ஹா நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஆணையரை நியமிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் 3 அதிகாரிகள் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று நள்ளிரவில் அனுப்பட்டது. அதில் திரிபாதி, கரன்சின்ஹா, அசுதோஷ் சுக்லா, ஆகிய மூன்று பேரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆணையராக நியமிக்கப்பட்ட திரிபாதி அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆணையர் பதவிக்கான தேர்வில் திரிபாதியின் பெயரை ஆணையம் நீக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள கரன்சின்ஹா மற்றும் அசுதோஷ் சுக்லா ஆகிய இருவர் மீதும் இதுவரை குற்றச்சாட்டுகள் எழவில்லை.
அசுதோஷ் சுக்லா நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் போது ஆணையராக செயல்பட்டவர். இருப்பினும் இம்முறை கரன்சின்ஹா புதிய ஆணையராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர் உள்விவரமறிந்தவர்கள்.
இதற்கிடையே கரன்சின்ஹா புதிய ஆணையராக நேற்று இரவு நியமிக்கப்பட்டதாவும், இது தொடர்பான அரசாணை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.