குமரியில் பயங்கரம் - மீனவ கிராமத்தில் வீடுகளில் புகுந்து வாலிபர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு : போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு

 
Published : Oct 20, 2016, 01:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
குமரியில் பயங்கரம் - மீனவ கிராமத்தில் வீடுகளில் புகுந்து வாலிபர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு : போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு

சுருக்கம்

குமரி மாவட்டம் ராமன்துறை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை வெடிகுண்டு வீசி விரட்டிய கும்பல்  வீடு புகுந்து வாலிபர்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

குமரிமாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே ராமன்துறை கிராமத்தில், கடந்த 10ம்தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவரை 10க்கும் மேற்பட்ட கும்பல் தாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் மோதல்கள் ஏற்படலாம் என தகவல் பரவியதால் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புதுக்கடை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த சுமார் 25க்கு மேற்பட்டோர் கும்பலாக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த கும்பல், திடீரென போலீசார் பாதுகாப்புக்காக நின்ற பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசினர். வெடிகுண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினர். பின்னர், அந்த கும்பல் போலீசாரிடம், உயிர் வேண்டுமென்றால் ஓடிவிடுங்கள் என விரட்டினர். இதனால் போலீசாரும், தலைதெறிக்க அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதை தொடர்ந்து அந்த கும்பல் சாலையோரம் வெடிகுண்டுகளை வீசினர். இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து அந்த கும்பல் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாபு, ததேயுஸ் மற்றும் ஜெரோம் உள்பட பலரை வெட்டி சாய்த்தனர்.

தொடர்ந்து அந்த கும்பல் வெடிகுண்டுகளை சாலையில் வீசியபடி அங்கிருந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் சாவகாசமாக நடந்து சென்றனர். 
இதில் படுகாயம் அடைந்த பாபு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் ராமன்துறை கிராமமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதனால் அங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதிக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், குளச்சல் டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராமன்துறையில் ஏற்கனவே கடந்த 2004, 2006 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!