
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் 5 எம்எல்ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். காரணம் என்ன..? கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி அந்த 5 எம்.எல்.ஏ.,க்களும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனராம்.
ஓக்ஹி புயல் இழப்பீடு குறித்து அறிவிக்கக்கோரி குமரி மாவட்ட ஆட்சியர் அறையில் திமுக., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ஓக்ஹி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் அறையில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் இந்த 5 எம்எல்ஏக்களும் சென்றனர். பின்னர் ஆட்சியர் அறையில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் எம்எல்ஏக்கள் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை, கன்னியாகுமரியை தேசியர் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
அண்மையில் அடித்த கடும் புயலுக்கு கன்னியாகுமரி மாவட்டமே நிலை குலைந்து போனது. ஓக்ஹி புயல் பலரின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல இடங்கள் நீரில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்து மக்கள் துன்பத்தை அனுபவித்தனர். இத்தகைய இயற்கைச் சீற்றம் கன்னியாகுமரியைப் புரட்டிப் போட்ட போது, அங்கே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எந்த சட்டமன்ற உறுப்பினரும் உடன் இல்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என முகங்காட்டி நிவாரணப்பணிகள் குறித்துச் சொன்னார்கள். அப்போதும், தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களின் தலைகளைத்தான் காணோம்.
இத்தகைய பின்னணியில், தொகுதி மக்களின் அதிருப்தியை மேலும் மேலும் சம்பாதிக்கக் கூடாதென்ற காரணத்தால், திடீரென களம் புகுந்த திமுக., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியர் அறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.