
கோவையில் விமான நிலைய பின்புறம் தனியார் கல்லூரி மாணவி கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை சீரழித்த 3 கயவர்களை காவல் துறையினர் சுட்டுப்பிடித்தனர். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மாணவியை சீரழித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இரவு 11 மணிக்கு மாணவி நண்பருடன் இருட்டான பகுதிக்கு சென்றது ஏன்? என ஒரு தரப்பினர் மாணவியை குற்றம்சாட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் மாணவியை குற்றம்சாட்டியது சர்ச்சயை கிளப்பியது.
''ஒரு ஆணும், பெண்ணும் இரவு 11 மணிக்கு மேல் விமான நிலையத்தின் பின்புறம் விளக்கு வெளிச்சம் கூட இல்லாத இடத்தில் இருந்தார்களே அந்த சமூக சீரழிவை எப்படி தடுப்பது?அது வளர்க்கிற விதத்தில் இருக்கிறது. ஆகவே சமுதாயத்துக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பங்களிப்பை சமூகம் கொடுக்கும் மூலமாகத்தான் குற்றங்களை குறைக்க முடியும்'' என்று அவர் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
கனிமொழி வேண்டுகோள்
இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ''பெண்களுக்கு எதிரான குற்றங்களை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும். இதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அந்த பெண்கள் மீதே குற்றம் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.