
விபத்தில் உயிருக்கு போராடிய ஒருவரை மீட்டு கனிமொழி எம்.பி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் விபத்தில் சிக்கியவரின் உடல்நிலை குறித்து அவ்வபோது தனக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி தன்னுடன் வந்த மாவட்ட நிர்வாகிகளை மருத்துவமனையில் உடனிருக்க உத்தரவிட்டுள்ளார்.
சிவகிரியில் பள்ளி ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக கனிமொழி எம்.பி நேற்று திருநெல்வேலி சென்றார். அங்கு பள்ளி அடிக்கல் நாட்டு விழாவை முடித்து விட்டு இரவு பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றிவிட்டு விடியற்காலை 2 மணிக்கு தேனி வந்தார் கனிமொழி.
இதையடுத்து இன்று காலை கம்பத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பின்னர், மதுரையில் 5 மணி விமானத்திற்கு தயாரானார்.
கம்பத்தில் நிகழ்ச்சி நிறைவடைய காலதாமதமானதால் மிகவும் பரபரப்பாக காரில் மதுரை கிளம்பினார் கனிமொழி. மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
தேனியில் இருந்து மதுரை செல்லும் வழியில் ஒரு கூட்டம் பரபரப்பாய் ஓடுவதை கண்ட கனிமொழி திடீரென காரை நிறுத்த சொன்னார். பின்னர் கனிமொழியும் காரை விட்டு இறங்கி ஓடினார்.
அங்கு சென்று பார்த்தபோது யாரோ ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த கனிமொழி உயிருக்கு போராடியவரை மீட்டு தன்னுடன் வந்த மாவட்ட செயலாளர் காரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் மருத்துவமனையில் இருந்து விபத்தில் சிக்கியவரின் உடல்நலம் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
தான் ஒரு அரசியல்வாதி என்று பாராமல், எம்.பி. என்பதை பாராமல் மனித நேயத்தை மட்டும் கருத்தில் கொண்டு கனிமொழி செய்த இந்த உதவி அங்கு இருந்தவர்களை வெகுவாக நெகிழ செய்தது.
உதவி என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார் கனிமொழி.