
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. ஜனவரி மாதம் ஓமிக்ரான் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு குறைந்தது.மாநிலத்தில் ஒரு கட்டத்தில் வைரஸ் பாதிப்பு 50க்கும் கீழாகக் கூட குறைந்தது. இதையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கினர். இதனிடையே நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
பல வாரங்களுக்குப் பின்னர், நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும் கூட சில வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் கூட கிட்டதட்ட அதேநிலை தான். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும். பொதுஇடங்களில் ஒருவருக்கொருவர் 6 அடி துரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி(Hand Sanitizer) வைக்கப்பட வேண்டும். மேலும், உடல் வெப்பநிலையை IR Thermometer கருவி மூலம் கண்காணிக்க வேண்டும்.
பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம்(AC) பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு செல்வதையும் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றிட வேண்டும்.
இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை (Precautionary Dose) தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால் கொரோனா நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!
இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே ரெடி.! அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் ஓபிஎஸ் வட்டாரம்