
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, தியானம் செய்வதற்காகவே காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கமளித்துள்ளது.
தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆளுநர் பன்வாரிலால் பிரோகித், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா துவங்கியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, மேடையில் அமைர்ந்திருந்த விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்ற விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவரின் இந்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது குறித்து, சங்கர மடம் விளக்கமளித்துள்ளது. அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் கூறியுள்ளது. கடவுள் வாழ்த்து பாடும்போது, சங்கராச்சாரியார்கள் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம் என்றும் சங்கர மடம் தெரிவித்துள்ளது.