
SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கமல்ஹாசன், ''சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறையால் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களால் மட்டுமே பேசப்பட வேண்டியவை அல்ல; அவை மத்திய அரசால் தீர்க்கப்பட வேண்டியவை.
நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினோம், ஆனால் ஒன்றுக்கொன்று முரண்பாடான பதில்களே எங்களுக்குக் கிடைத்தன. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பதில்களைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் நம்பிக்கையூட்ட முடியவில்லை. இது பரந்து விரிந்த நமது தாய்நாட்டின் நமது சகோதர மாநிலங்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் ஒரு தேசிய அளவிலான சிரமம். 'உலகில் நான் காண விரும்பும் மாற்றமாக முதலில் நானே இருக்க வேண்டும்' என்று எனக்குக் கற்பிக்கப்பட்டது. எனவே, என் சொந்த குடும்பத்திலிருந்தே ஒரு உதாரணத்துடன் தொடங்குகிறேன்.
என் உடன் பிறந்த மூத்த சகோதரர், சாருஹாசன் அவர்களுக்கு இப்போது கிட்டத்தட்ட 96 வயதாகிறது. அவர் தனது வாக்களிக்கும் உரிமையைச் செலுத்த விரும்புகிறார். அவர் ஒரு வழக்கறிஞர்; வாதிடக்கூடியவர், ஒருவேளை வாதாடி தனது வாக்குரிமையை அவரால் வெல்லவும் முடியும். ஆனால் கல்வி கற்கும் வாய்ப்பற்ற, அதிகாரமற்ற எளியவர்களின் நிலை என்ன?
சாமானியக் குடிமகனின் நிலை என்ன?
நான் கமல்ஹாசன். இன்றைய நிலவரப்படி, என் வாக்குரிமை பத்திரமாக இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை அது அச்சுறுத்தப்பட்டால், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் எனக்காக வாதாடுவார்கள், போராடுவார்கள். ஆனால் எந்தக் கட்சியையும் சாராத, எந்தக் கொள்கையையும் பின்பற்றாத சாமானியக் குடிமகனின் நிலை என்ன?
ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல
வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக மட்டுமே குடிமக்களை ஒரு அரசியல் கட்சியில் சேருமாறு அறிவுறுத்துவது ஒரு ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது என்று நான் நம்பவில்லை. ஒரு இந்தியக் குடிமகன் அச்சமின்றி வாக்களிக்க அதுவே ஒரே வழி என்றால், எங்கள் தமிழ்நாட்டு மக்கள் இந்த அவையின் முன் ஒரு எளிய மற்றும் பணிவான கேள்வியை முன்வைக்கிறார்கள்:
சாமானியக் குடிமகன் எந்தக் கட்சியில் சேர வேண்டும்?
சாமானியக் குடிமகன் எந்தக் கட்சியில் சேர வேண்டும்? பாஜகவிலா? காங்கிரஸிலா? திமுகவிலா? அதிமுகவிலா? ஆம் ஆத்மி கட்சியிலா? அல்லது அவர்களின் வாக்களிக்கும் சுதந்திரத்தை நசுக்காத, பறிக்காத வேறு ஏதேனும் ஒரு வசதியான கட்சியிலா?
சுயநல காரணங்களுக்காக, "மக்கள் நீதி மய்யத்தில் சேருங்கள்" என்று நான் கூறலாம். ஆனால் என் ஜனநாயக மனசாட்சி அந்தச் சுயநலத்திற்கு இடமளிக்க மறுக்கிறது. நமது உரிமைகளைப் பாதுகாக்க ஏற்கனவே வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட, அமைதியான அறவழி முறைகளைப் பயன்படுத்தியே நான் தொடர்ந்து போராடுவேன். வேறு எந்தப் பாதையும் இரத்தம் சிந்துதலுக்கே வழிவகுக்கும் என்று வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.
மற்ற விஷயங்களை விட இது முக்கியம்
இந்த மண்ணில் ஏற்கனவே போதுமான அளவு குருதி சிந்தப்பட்டுவிட்டது. இப்போது, நம் மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தக் கூட்டத்தில் நாம் விவாதிக்கும் மற்ற பல விசயங்களை விட இது மிக அவசரமானது. முக்கியமானது. துணிச்சலும் உறுதியும் மிக்க நமது இந்திய ராணுவம் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
துருப்பிடிக்க அனுமதிக்க கூடாது
இந்த நாட்டின் எல்லைக்குள் நம் மக்களைப் பாதுகாக்கப் பொறுப்பளிக்கப்பட்ட படைவீரர்கள் நாம். நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே. தவறான பயன்பாடு, வசதியான மறதி அல்லது அலட்சியம் ஆகியவற்றால் அதை அரிக்கவோ, துருப்பிடிக்கவோ அல்லது உடைந்து போகவோ நாம் அனுமதிக்கவே கூடாது.
பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்
இன்று நான் எழுப்புவது ஒரு கேள்வி அல்ல, ஒரு கவலை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியக் குடியரசை உருவாக்கும் எண்ணற்ற மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களையும் கொண்ட இந்திய மக்களின் எளிய பிரதிநிதியாக இந்தக் கவலையை நான் இந்த அறிவார்ந்த அவையின் முன் வைக்கிறேன். வெறும் ஆலோசனை மட்டும் போதாது. இந்தப் பிரச்னை நமது ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்தான அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.