உதயநிதிக்காக களமிறங்கிய கமல்... 'அவர் ஒரு போர்வீரன்' என புகழாரம்!

Published : Apr 18, 2026, 01:05 PM IST
Kamalhaasan

சுருக்கம்

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ள நிலையில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், சேப்பாக்கம் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Kamal Haasan Campaigns for Udhayanidhi : சென்னையில் திமுக கூட்டணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். உதயநிதி ஒரு போர்வீரன் என்றும், இந்தத் தேர்தல் இந்தியாவுக்கானது என்றும் அவர் பேசினார். மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து, சிந்தாதிரிப்பேட்டையில் அவர் வாக்கு சேகரித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் (SPA) இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "இந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில யார் போட்டியிடுறாங்கன்னு உங்க எல்லாருக்குமே தெரியும் (உதயநிதி ஸ்டாலின்). இந்த ஆட்சி மீண்டும் வரணும்கிறது என்னோட விருப்பம் மட்டுமல்ல, மக்களோட விருப்பமும் அதுதான். இப்போ இருக்கிற அரசியல் சூழல்ல, உங்க ஓட்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஆனது. இந்தியாவுக்காக தமிழ்நாடு போராடிக்கிட்டு இருக்கு. அந்தப் போர்க்களத்துல உதயநிதி ஒரு போர்வீரன். சாதனைங்கிறது வெறும் பேச்சுல இல்லை, அதை செஞ்சு காட்டுறதுலதான் இருக்கு.

உதயநிதிக்கு பிரச்சாரம் செய்த கமல்ஹாசன்

சேப்பாக்கம்னு சொன்னாலே, எல்லாருக்கும் விளையாட்டுதான் ஞாபகத்துக்கு வரும். சேப்பாக்கத்துல உதயநிதியை நாம ஜெயிக்க வைக்கணும். திமுகவோட எங்க கூட்டணி இன்னைக்கு மட்டும் இல்லை, நாளைக்கும்தான். கடந்த அஞ்சு வருஷ அரசியலை பார்த்தாலே, நாம ஏன் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடணும்னு தெரியும். இப்போ இருக்கிற சூழலும் அதையேதான் சொல்லுது," என்றார்.

திமுக கூட்டணி வெற்றி பற்றி எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'ரொம்ப நம்பிக்கையாக இருக்கேன்' என்று கமல் பதிலளித்தார். முன்னதாக, துணை முதலமைச்சரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தொழிலாளர்கள் நிறைந்த இந்த மாவட்டம், எப்போதுமே திமுகவின் அசைக்க முடியாத கோட்டை," என்றார்.

மேலும், வேட்பாளர்களின் உள்ளாட்சிப் பிரதிநிதி அனுபவம் தொகுதிக்கு நன்மை தரும் என்று சுட்டிக்காட்டிய அவர், "நகராட்சித் தலைவராகவும், கட்சிப் பொறுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் கொண்ட ராமகிருஷ்ணனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், "கடந்த ஐந்தாண்டு கால எடப்பாடி பழனிசாமி அரசு, தளி பகுதியின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவில்லை. திருமூர்த்தி மலைப் பகுதியில் சாலை வசதிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்துரிமை போன்ற திட்டங்கள்தான் இன்றும் தமிழ்நாட்டின் அடித்தளமாக உள்ளன," என்றார். இந்த தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!
அடுத்த 12 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும்! இடியுடன் கூடிய கோடை மழை எப்போது? வெளியான முக்கிய அப்டேட்