கலைஞர் மகளிர் உரிமை தொகை: உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ்!

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்காத பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 1.63 கோடி பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில்  1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பலரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Latest Videos

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்கிட வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது தமிழ்நாட்டு மகளிரின் உழைப்புக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, மகளிர் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழவும், சுதந்திரமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, நிபந்தனைகளை தளர்த்தியதால் மாற்றுத்திறனாளிகளூக்கான உதவித்தொகை பெறும் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும், முதியோர் உதவித்தொகை பெறும் 4 லட்சத்து 72 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும் கலைஞர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.” என்று உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்தார்.

பொதுவாக எந்த திட்டத்திலும், திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை இருக்காது என்று தெரிவித்த அமைச்சர் உதயநிதி, “ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தகுதியான மகளிரும் உரிமைத் தொகை பெறுவதில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் மேல்முறையீடு செய்து இந்த திட்டத்தின் பயனை பெறலாம் என்ற நிலையை நம்முடைய அரசு உருவாக்கியுள்ளது.” என்றார்.

பிரதமர் மோடிக்கு ஃபோன் போட்ட இஸ்ரேல் பிரதமர்: போர் குறித்து அப்டேட்!

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்து, நவம்பர் 30ஆம் தேதிக்குள் உரிய தீர்வை அளிப்பார்கள். அதுமட்டுமல்ல, ஏற்கனவே விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.” என்றார்.

இந்த திட்டத்தின் பயனாளிகளாக தகுதியுடையவர்கள் யார் யார் என அரசு எடுத்துக்கூறியதும், தமிழ்நாட்டின் மொத்த குடும்ப அட்டைதாரர்களில் 67 லட்சம் பேர், தாங்களாகவே புரிந்துகொண்டு விண்ணப்பம் எதுவும் அளிக்கவில்லை. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!