
அரியலூர்
ஆட்சியரை தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட குற்றவியல் நீதித் துறை நடுவர் மகாலட்சுமியும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு நலமுடன் இருக்கிறார். இதற்கு மக்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.
அரசு மருத்துவமனை என்றாலே ஏழை, எளிய மக்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற நிலை அனைவர் மத்தியிலும் அழுத்தமாக பதிந்துவிட்டது. இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் க.இலட்சுமிபிரியா அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகாலட்சுமி அரியலூர் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து வழக்கமாக பெறும் ஒப்புதல் பெற்ற மருத்துவர்கள் திங்கள்கிழமை நீதிபதிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நீதிபதி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரியலூரில், மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து, நீதிபதியும் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பது மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
கல்வியில் முன்னெற்றம் வேண்டுமென்றால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல்வாதிகள் என அனைவரின் பிள்ளைகளும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர வேண்டும்.
மருத்துவத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று ஒருபக்கம் முழங்கி வரும் வேளையில் இந்த ஆட்சியர், நீதிபதி போன்று ஒருசிலர் அதனை மிகவும் எளிதாக செயல்படுத்திவிட்டு கடந்து செல்கின்றனர்.