சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணக்காக கும்பகோணம் கொணடு செல்லப்பட்டுள்ள அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை, மயிலாப்பூரில், பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள, இக்கோவிலில், புன்னைவனநாதர் சன்னிதியில், சிவலிங்கத்திற்கு, பார்வதி அம்மன், மயில் வடிவில், வாயில் பூக்களை எடுத்து பூஜை செய்யும், 1,000 ஆண்டுகள் பழமையான மரகத சிலை இருந்தது; ராகு, கேது சிலைகளும் இருந்தன.
இந்த சிலைகள் சேதம் அடைந்துவிட்டன; புதிய சிலைகள் வைக்க வேண்டும்' என, 2004ல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்ட, தற்போதைய இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர், திருமகள், முடிவு செய்து உள்ளார். இவருடன், முன்னாள் கமிஷனர், தனபால், ஆஸ்தான ஸ்தபதி, முத்தையா மற்றும் சிலரும் சேர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இரவோடு இரவாக, மரகத மயில் உட்பட, மூன்று சிலைகளையும் கடத்தியுள்ளனர்.
மேலும், சிவலிங்கத்திற்கு, பார்வதி அம்மன், மயில் வடிவில், வாயில் பாம்புடன் பூஜை செய்வது போலவும், ராகு, கேது சிலைகளையும் புதிதாக செய்து வைத்தனர். இது, ஆகம விதிகளுக்கு எதிரானது' என, கோவில் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், திருமகள், வெளியூர்களில் இருந்துஅர்ச்சகர்களை வரவழைத்து,கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்.
கபாலீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்டது பற்றி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், ஆகஸ்டில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் தொடர்பாக, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, அவரது தலைமையிலான போலீசார், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் திருமகளிடம், பல கட்டமாக விசாரணை நடத்தினர். அப்போது, திருமகள், 'எனக்கு எதுவும் தெரியாது' என, கூறியுள்ளார். எனினும், திருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.பின், முக்கிய புள்ளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். திருமகள் தாக்கல் செய்த, முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், மூன்று மாதங்களாக, திருமகள் தலைமறைவானார்.
இந்நிலையில், சென்னை, வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த திருமகளை, போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரிடம், போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். பின் அவர், கும்பகோணத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.