
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தழுதாளி பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக உள்ளார். கடந்த ஜூலை மாதம், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குப்பாசி என்பவரின் மகள் சுந்தரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, இவர்கள் இருவரும், புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள கொட்டுப்பாளையத்தில் குடியேறினர்.
இந்த நிலையில், ராமஜெயம், மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொங்கல் தினத்தன்று, ராமஜெயம், மனைவி சுந்தரியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். கணவரைத் தேடி வந்த சுந்தரி புதுச்சேரி வந்துள்ளார். ஆனாலும் ராமஜெயத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்தார்.
சுந்தரியை, வில்லியனூர் மகளிர் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிய நிலையில், சுந்தரியுடன் வாழ மறுத்து, ராமஜெயம் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமஜெயம் உறவினர்களிடம், சுந்தரியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் அனைவரும் புதுச்சேரி, கொட்டுப்பாளையம் வந்தனர்.
அப்போது ராமஜெயத்தின் வீடு பூட்டுப்போட்டு இருந்தது. இதனால், சுந்தரி விரட்கதி அடைந்தார். இதனைத் தொடரந்து கணவர் ராமஜெயம் வீட்டின் முன்பு சுந்தரி போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென சுந்தரி கூறினார். போராட்டத்தின்போது சுந்தரி, திருமண சான்றிதழை வைத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுந்தரியிடம் பேச்சுவார்ததை நடத்தி அவரை அழைத்து சென்றனர்.