
திருப்பூர்
திருப்பூரில் அட்சய திருதி நாளையொட்டி இந்தாண்டு நகை விற்பனை குறைவான அளவிதான் இருந்தது என்று திருப்பூர் நகை கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
“அட்சய திருதியன்று தங்கம் வாங்கினால் தங்கள் குடும்பத்தில் சேமிப்பு அதிகரிக்கும்” என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.
இதனால் அட்சய திருதியான நேற்று திருப்பூருக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்தனர்.
இதில், பலர் தங்கள் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளுக்காகவும், பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளையும் வாங்கினார்கள். இதனால் திருப்பூர் குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள புதிய சந்தை வீதி, காமராஜர் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் இருக்கும் நகைகடைகளில் காலை முதலே பலர் காத்திருந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
நகைக் கடைகளில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 770-க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் நகை கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறியது:
“கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் அதிகமானோர் கடைகளுக்கு வந்து நகைகளை வாங்கிச் சென்றனர். ஆனால், விற்பனை அளவைக் கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது. நகை வாங்கியவர்கள் குறைவான அளவிலேயே நகைகளை வாங்கிச் சென்றனர்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.