
தங்க மலை ரகசியங்கள் கூட வெளி வந்துவிடும் போல ஆனால் தங்கத்தாரகை என்று போற்றப்பட்ட ஜெயலலிதாவின் உடல் சுகவீனமானது குறித்த உண்மையான தகவல்கள் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக அதிலும் ரெட்டைக் கொம்பாக இருக்கிறது.
காய்ச்சலால்தான் ஜெயலலிதா அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் அப்பல்லோ ரெட்டியின் வார்த்தகளின் மூலம் ‘ஆபத்தான நிலையில் அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா. சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி காய்ச்சல் என்று உண்மைக்கு மாறான செய்திகள் இடம் பெற்றன.’ என்று உண்மையை உடைத்துக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா ஆங்கில மருத்துவம் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அக்குப்பஞ்சர் சிகிச்சையும் அவருக்கு தரப்பட்டது என அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் மூலம் தெரியவந்திருக்கிறது. அவர் சமீபத்தில் விசாரணை கமிஷன் முன் ஆஜரானதிலிருந்து இந்த விஷயம் வெளிப்பட்டது.
இந்நிலையில், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக ஜெயல்லைதாவின் காலத்தில் கோலோச்சிவிட்டு பின் சர்ச்சையுடன் ஓய்வு பெற்ற ராமமோகன்ராவ் வேறு மாதிரியான ஒரு தகவலை இப்போது சொல்லியிருக்கிறார்.
அதில் “2016 ஆகஸ்டுக்கு மேல் ஜெயலலிதா மேடத்துக்கு உடல்நிலை குறைபாடு அதிகரித்துக் கொண்டே போனது. இதற்காக சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டார் அவர். நான் அவரிடம் “சித்தாவில் உடனடியாக பலன் கிடைக்காது. தயவு செய்து ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்டு உடம்பை சீராக்கிவிட்டு அதன் பின் சித்தா மூலமாக பலப்பட்டுக் கொள்ளுங்க. ப்ளீஸ்!’ என்றேன். ஆனால் ‘இல்லை எனக்கு சித்த மருத்துவ முறையே நன்றாக இருக்கிறது.’ என்று சொல்லிவிட்டார். அவர் ஒரு வார்த்தையை கூறிவிட்டார் அதன் பின் அப்பீலுக்கு போவதில்லை நான்.
அரசு உயரதிகாரி எனும் முறையில் ஜெயலலிதா மேடத்தின் கஷ்டங்களிலும், மகிழ்ச்சியிலும் உடனிருந்தவன் நான்.” என்றிருக்கிறார்.
ஆக ரெட்டி சொன்ன தகவல்களால் தமிழகம் ஆடிக் கிடக்கும் நிலையில் இப்போது ராவ் தட்டிவிட்டிருக்கும் விஷயத்தால் தமிழ்நாடு அதிர்கிறது. என்னென்னமோ வைத்தியங்கள் பார்த்தும் எதுவும் கைகொடுக்கவில்லையே ஜெ.,வுக்கு பாவம்! என்பதே மக்களின் அதிர்ச்சி வாக்கியம்.