முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு…? ஐகோர்ட் கேள்வி!

By vinoth kumarFirst Published Nov 15, 2018, 4:47 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் புகழேந்தி. அதிமுக நிர்வாகி. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. 

இந்த சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை ஐகோர்ட்டு நியமிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் புகழேந்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் நந்தகுமார் ஆஜரானார். 

அப்போது நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்கா பிறப்பித்த தீர்ப்பில் அந்த சொத்துக்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். பல இடங்களில் ஏராளமான சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் உள்ளது. அதேநேரம், அவரது வாரிசு என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளனர்.

எனவே, இந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விடுகிறோம். மேலும், இந்த வழக்கை விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம் என கூறி உத்தரவிட்டனர்.

click me!