ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் அழிப்பு... வசமாக சிக்கிய அப்பல்லோ!

By vinoth kumarFirst Published Sep 19, 2018, 4:05 PM IST
Highlights

அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர், அப்பல்லோ மருத்துவமனை நர்சுகள், பிசியோதெரபிஸ்ட்கள், டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர், செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். அப்பல்லோ சார்பில் மருத்துவ ஆவணங்கள், சிகிச்சை விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைப்பது இல்லை என்றும் அப்பல்லோ நிர்வாகம் அடிக்கடி கூறி வந்தது. 

இந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதா ஜூஸ் குடித்துக் கொண்டே டி.வி. பார்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோவை தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்று சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் சசிகலாவே எடுத்தார் என்று வெற்றிவேல் கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார். மேலும் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பினார். அதற்கு அப்போலோ நிர்வாகம், கடந்த 11 ஆம் தேதி, சிசி டிவி வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக தெரிவித்தது.

மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. சர்வர்களில் ஒரு மாத பதிவுகள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் சேமிக்க முடியாது. புதிதாக பதிவுகள் சேரும்போது பழைய பதிவுகள் தானாகவே அழிந்து விடும். எனவே வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவில்லை என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

click me!