
முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் ஒரு இரும்புக்கோட்டை. அங்கு அமைச்சராக இருந்தவர்களே வாசல் , ரிஷப்ஷன் தாண்டி சென்றிருப்பார்களா தெரியாது. ஆனால் பொதுமக்கள் தற்போது தாராளமாக இல்லத்தை காண அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரீனா கடற்கரையில் பொதுமக்களும், தொண்டர்களும் இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நேராக அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை பார்க்க வருகின்றனர்.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டை பார்க்க பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் காவல் துறையினரால் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் வீட்டை யாரும் புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளனர். அதனால் பொதுமக்களிடம் உள்ள செல்போன், கேமராக்கள் உள்ளிட்டவற்றை கடுமையான சோதனையிட்டு பறிமுதல் செய்த பின்னரே அனுமதிக்கிறார்களாம். இதற்காக தனி டோக்கன் போட்டு செல்போன் , கேமராக்கள் , பைகள் வாங்கி வைக்கப்பட்டு வீட்டை பார்த்துவிட்டு வந்த பிறகு ஒப்படைக்கப்படுகிறதாம்.