
முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் இன்று மாலை எம்ஜிஆர் சமாதி அருகே நடைபெறுகிறது. அவரது உடல் அடக்கத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. அவரது உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு ஜனாதிபதி , பிரதமர் முதல் முக்கிய விவிஐபிக்கள் , விஐபிக்கள் , பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துகின்றனர். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் உடலும்1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் இங்கு வைக்கப்பட்டு பின்னர் அண்ணா சமாதி அருகே மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
அதே போன்றதொரு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உடல் இன்று பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஜெயலலிதா உடல் எம்ஜிஆர் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அருகில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக அவரது உடல் வைக்கப்படும் சந்தனபேழை அண்ணா நகரில் தயாராகிவிட்டது. இதே போல் அவர் உடலை கொண்டு செல்லும் ராணுவ பீரங்கி வாகனம் கோயம்பத்தூரிலிருந்து கொண்டுவரப்படுகிறது. சாலை வழியாக கொண்டுவந்தால் ஜனத்திரளால் கொண்டுவர முடியாது என்பதால் ராணுவ விமானம் மூலம் பீரங்கி வாகனம் கொண்டுவரப்படுகிறது.
இந்த பீரங்கிவாகனம் பிரதமர் , ஜனாதிபதி , முதல்வர் போன்ற முக்கியஸ்தர்கள் உடல் வைக்கப்பட்டுகொண்டு செல்லப்படும் வாகனம் ஆகும்.