
மருத்துவமனையில் இருந்தபடி எம்ஜிஆர் எப்படி சாதனை படைத்து வெற்றி பெற்றாரோ, அதேபோல் ஜெயலலிதா சாதனை படைப்பார் என நடிகர் ஆனந்த்ராஜ் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களில் யாகம், பூஜை, தேர் இழுத்தல், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர், பல்வேறு கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்களும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அவரது உடல்குறித்து விசாரித்து செல்கின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் ஆனந்தராஜ் சென்றார். அங்கு முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
நம்முடைய பிரார்த்தனையினால் முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்றுள்ளார். மிக விரைவில் அவர் வீட்டுக்கு திரும்புவார். அது நமக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும். தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் சட்டமன்ற இடை தேர்தல்களில் அ.தி.மு.க. பெறபோகிறது. அந்த வெற்றி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறந்த மருந்தாக அமையும். அது நிறைவேறும். எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்து எப்படி சாதனையை படைத்தாரோ அதேபோல், முதலமைச்சர் ஜெயலலிதாவும் சாதனை படைப்பார்.