"ஜெய ஜெய லலிதே என்ற ராகத்தில் எனக்காக பாடினார்" - "முதல்வர் ஜெயலலிதா உருக்கம்"

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 03:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
"ஜெய ஜெய லலிதே என்ற ராகத்தில் எனக்காக பாடினார்" - "முதல்வர் ஜெயலலிதா உருக்கம்"

சுருக்கம்

பிரபல கர்நாடக இசைப் பாடகர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதில், ஜெய ஜெய லலிதே என்ற ராகத்தில் எனக்காகவே பாடினார் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்ட இரங்கல் செய்தி:-

பால முரளிகிருஷ்ணா தனது 6வது வயதில் இசை பயணத்தை தொடங்கினார். கஞ்சிரா, மிருதங்கம், வயலின் போன்ற இசை கருவிகளை வசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார். கர்நாடக இசையை முறையாக கற்று அவர் தனது 8வது வயதில் இசை கச்சேரியை நடத்தினார்.

அன்று முதல் "பால' என்ற அடைமொழியுடன் பால முரளிகிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீ பத்ராசலம் ராமதாஸ், ஸ்ரீ அன்னமாச்சார்யா கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்திய டாக்டர் பால முரளிகிருஷ்ணா தனது தாய்மொழியான தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

கலை, பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக விரிவான இசை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எம்.கே.பி. அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியவர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா. இசையில் பல்வேறு ஆராய்ச்சிகளைப் புரிந்தவர்.

திரைத்துறையிலும் காலடி பதித்து, பல திரைப்படங்களுக்குப் பின்னணி பாடியதுடன், பல்வேறு மொழிகளில் 400 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். "பக்த பிரகலாதா' என்ற திரைப்படம் மூலம் நாரதராக நடித்த பால முரளிகிருஷ்ணா, பல்வேறு படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, சுவாதித் திருநாள் விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி, செவாலியே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என பல்வேறு விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா.
அவரது 75-வது பிறந்த நாள் விழா, செவாலியே விருது பெற்றதற்கான பாராட்டு விழா கடந்த 2005-ஆம் ஆண்டு சென்னையில் நடந்தது. அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசினேன். அப்போது, எனக்காக "ஜெய ஜெய லலிதே'’ என்ற ராகத்தை அர்ப்பணித்ததும், அதே விழாவில் தமிழக அரசின் சார்பில் கந்தர்வ கான சாம்ராட் என்ற பட்டத்தை வழங்கியதும் இன்றும் எனது மனதில் பசுமையாக உள்ளது.

இழப்பை ஈடு செய்ய முடியாது: இசைத் துறையில் அளப்பரிய பணியாற்றிய பால முரளிகிருஷ்ணா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், இசைத் துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கும் மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பால முரளிகிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்