
தமிழகத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல், அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தற்காலிகமாகக் குறைத்து, விசா வழங்கும் பணியை நிறுத்திவைத்துள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தமிழகத்தில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கமான பணிகளுக்கு வரும் பணியாளர்களையும் திடீரென குறைத்து, விசா வழங்கும் பணியையும் நிறுத்தி வைத்துள்ளது. விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கும் அனைத்து நபர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அடுத்த தேதிகுறித்து தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் ஏதும் உதவி தேவைப்பட்டால், அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்துள்ள 91-44-2857-4000 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் எந்த விதமான, பதிலும் இல்லாவிட்டால், புதுடெல்லியில் உள்ள 91-11-2419-8000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கர்கள் தமிழகத்தில் ஏதேனும் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தால், அதை மறு ஆய்வு செய்யவும், கவனத்துடன், பாதுகாப்பான இடத்தில் தங்கவும், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைக் கேட்டு அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம் நடக்கும் இடங்கள், வன்முறை உருவாகும் சூழல் இருக்கும் இடளங்களுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.