ஜெ.,வுக்கு சிகிச்சை வழங்கியதில் அரசின் குறைபாடுகள் அதிகம்...! கிழித்துத் தொங்கவிட்ட அந்த முக்கிய நபர் யார்?

By vinoth kumarFirst Published Dec 19, 2018, 1:17 PM IST
Highlights

கமிஷனிடம் ஆஜராக வந்தவர்கள், எதற்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ பார்த்தசாரதியின் குறுக்கு விசாரணைக்கு பெரிதாய் பயந்தார்கள். அப்பேர்ப்பட்ட பார்த்தசாரதி ராஜினாமா செய்தது பெரிய விவகாரம்தானே? சரி, ஏன் ராஜினாமா? என்று அவரிடமே பத்திரிக்கைகள் கேட்டதற்கு “ஆறு மாதங்கள் இங்கு பணி, வாரத்துக்கு மூன்று நாட்கள் வரவேண்டும் என்றார்கள்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி கமிஷனும், ரஜினிகாந்த்தும் ஒன்றுதான். அடிக்கடி பரபரப்பைக் கிளப்புவதும், பின் சில நாட்களுக்கு அமைதியாகிவிடுவது வாடிக்கை. சமீபத்தில் ஆணையத்திடம் அப்பல்லோ நிர்வாகம் சமர்ப்பித்த பில்களில், ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருந்த காலத்தில் உணவுக்காக செலவான தொகை மட்டும் ஹைலைட் ஹிட்டடித்திருக்கிறது. 

இந்த விவகாரம் நேற்றிலிருந்து வைரலாகி இருக்கும் நிலையில், ஆறுமுகசாமி விசாணை கமிஷனின் உள்ளே நடந்திருக்கும் ஒரு பிரச்னை ஒன்று பெரியளவில் வெளியே தெரியாமல் அமுங்கி, கடந்து போயிருப்பதை கவனித்தாக வேண்டும்! 

என்ன பிரச்னை... விசாரணை கமிஷன் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர் பார்த்தசாரதி. இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பாக ராஜினாமா செய்திருக்கிறார். விசாரணை கமிஷனுக்கு காஃபி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் ராஜினாமா செய்தது போல் இந்த விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக கடந்து போய்விட முடியாது. காரணம், ஜெ., மரணத்தின் உள் விவகாரங்களை நோண்டி எடுப்பதில் மிக தீவிரமாக இருந்த மனிதர் இவர். ஜெவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள், அவருக்கு தரப்பட்ட மருந்துகள் ஆகியவற்றில் ஆரம்பித்து சிகிச்சை காலத்தில் ஜெயலலிதாவின் மன ஓட்டம் எப்படி இருந்தது என்பது வரை அத்தனை விஷயங்களையும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் ஆணைய விசாரணையில் ஆஜராகி பேசும்போது, குடைந்தெடுத்து வெளியேக் கொண்டு வருவதில் கில்லாடி. 

அப்படித்தான், ஜெயலலிதாவின் மரண சமயத்தில் அவரது உடலில் பொட்டாஷியத்தின் அளவு அதிகரித்து இருந்தது என்கிற மிக நுணுக்கமான விஷயத்தை தூண்டில்போட்டு தூக்கி, பிரித்து மேய்ந்து அலசியவர் இவர். பொட்டாஷியம் ஏன் அதிகரித்தது? எப்படி அதிகரித்தது? இயற்கையாய் கூடியதா அல்லது செயற்கையாய் அதிகரிக்கப்பட்டதா? ஜெயலலிதா வாழ்வின் கிளைமேக்ஸ் நேரங்களான டிசம்பர் 4-ம் தேதியன்று காலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட காஃபியில் பொட்டாஷியம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்புள்ளதா? என்றெல்லாம் கேட்டு போட்டுப் பொளந்தவர் இந்த மனிதர்.

 

கமிஷனிடம் ஆஜராக வந்தவர்கள், எதற்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ பார்த்தசாரதியின் குறுக்கு விசாரணைக்கு பெரிதாய் பயந்தார்கள். அப்பேர்ப்பட்ட பார்த்தசாரதி ராஜினாமா செய்தது பெரிய விவகாரம்தானே? சரி, ஏன் ராஜினாமா? என்று அவரிடமே பத்திரிக்கைகள் கேட்டதற்கு “ஆறு மாதங்கள் இங்கு பணி, வாரத்துக்கு மூன்று நாட்கள் வரவேண்டும் என்றார்கள் துவக்கத்தில். ஒப்புக்கொண்டு உள்ளே வந்தேன். ஆனால் அதன் பின் ஐந்து நாட்கள் பணி இருந்தது, ஆறு மாதங்கள் கழிந்தும் கூட ஆணையம் தொடர்ந்தது. 

சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தனர், இதனால் எனக்கு மன அழுத்தம் உருவானது.” என்றவர் இறுதியாக...”ஜெயலலிதாவின் மரண காரணம் பற்றி நான் தெரிந்து கொண்ட உண்மைகள் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். விசாரணை நடந்து வரும் நிலையில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் மருத்துவ சிகிச்சையிலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான அரசு செயல்பாட்டிலும் நிறையக் குறைகள் உள்ளது.” என்றிருக்கிறார் வெகு வெளிப்படையாக. அப்டிப்போடு!

click me!