
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து, மீண்டும் நமக்கு தொண்டாற்ற வருவார் என பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு பிசியோதெரபி பெண் நிபுணர்களும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
மருத்துவமனையில் சுமார் ஒரு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினமும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் தீச்சட்டி ஏந்துவது, அலகு குத்துவது உள்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்போலோ மருத்துவமனை முன்பும் ஏராளமான பெண்கள் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், நடிகர் விஜயகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர் அலி உள்பட பலரும் நேற்று மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலனை விசாரித்து சென்றனர்.
அப்போது, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்று வருகிறார். நாமெல்லாம் மனநிம்மதியும், நம்பிக்கையும் பெறும் வகையில் அவர் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா நமக்கு தொண்டாற்ற வருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. அவர் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்பதை டாக்டர்கள் கூறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.