
ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலும் நீங்கியதை அடுத்து, திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிகட்டுப் போட்டிகள் இன்று உற்சாகமாக நடைபெற்றது. 450 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏதுவாக, தமிழக சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக, ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலும் நீங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில், இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதில், 450க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
.ஜல்லிக்கட்டை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பு குறித்தும், அரசின் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடமும், கிராம மக்களிடமும் கேட்டறிந்தார்.
மேலும், வாடிவாசல் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், காயமடைந்தவர்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து இன்று காலை பத்தரை மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாய் தொடங்கியது. மதுரை,திண்டுக்கல், புதுக்கோட்டை ,சிவகங்கை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 450 க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்பதற்காக கொண்டுவரப்பட்டிருந்தன.
முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து வாடிவாசலில் இருந்து கோவில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒவ்வொன்றாக காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
துள்ளிக்குதித்த காளைகளை காளையர்கள் உற்சாகமாய் அடக்கினர். வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.