
பெரம்பலூரில் நடைப்பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் கடந்தாண்டு ஒரு கோடி வரை வசூலானது. ஆனால், இந்தாண்டு நுழைவுக் கட்டணம் ஒரு ரூபாய் வசூலிப்பதால் வருகைத் தரும் கூட்டம் குறைந்து டல் அடிக்கிறது.
பெரம்பலூரில் உள்ள மக்கள் திருச்சி, சென்னை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வருவது வழக்கம்.
இந்த நிலையில், கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், மக்களிடையே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதன்முதலாக புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட ஆண்டில் ரூ. 28 இலட்சத்து 81 ஆயிரத்து 626 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. இது புத்தகப் பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இரண்டாவது வது முறையாக 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும், 2014-ல் ரூ. 1 கோடியே 9 இலட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2016-ல் ரூ. 1.81 கோடி மதிப்பிலான புத்தகங்களும் விற்பனையானது.
தற்போது பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் ஆறாவது புத்தகக் கண்காட்சி கடந்த சனவரி 27-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் இக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 122 அரங்குகளில் 90 பதிப்பகங்களைச் சேர்ந்த சுமார் 10 இலட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
பொதுமக்கள் வசதிக்காக மொபைல் ஏ.டி.எம், சிறுதானிய உணவு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் பிற்பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு உலக திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்பதோடு, பட்டிமன்றமும் நடைபெற்று வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டுகளைவிட தற்போது நடைபெறும் கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் புத்தகப் பிரியர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாக பதிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த காலங்களைப் போல் இல்லாமல், தற்போது நுழைவுக் கட்டணமாக ரூ. 1 வசூலிக்கப்படுகிறது.
இது பெரிய தொகை இல்லை என்றாலும், ஒருமுறை உள்ளே சென்றுவிட்டு மறுமுறை செல்ல வேண்டுமானால், மீண்டும் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள்.
அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசியர்களே நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து செல்வதில் ஆர்வம் காட்டவில்லை.
நாள் ஒன்றுக்கு ரூ. இ2 லட்சம் செலவிட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அழைத்து செல்லப்படும் பேராசிரியர்களுக்கும் இதேநிலை தான்.
இதனால், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களது கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை.
அதேபோல, புத்தகக் கண்காட்சி நடைபெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை இதுவும் பார்வையாளர்கள் வருகை குறைவுக்கு காரணம்.
கடந்த எட்டு நாள்களாக நடைபெற்ற கண்காட்சியில், இதுவரை சுமார் 30 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வருகை புரிந்துள்ளதால், நூல்களின் விற்பனையும் குறைந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த புத்தகக் கண்காட்சி, தற்போது டல் அடித்து வருவது பதிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வருகையும், நூல்கள் விற்பனையும் அதிகரிக்கும் என விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.