
அதிமுக அரசு மீதான வெறுப்பினாலேயே மெரினாவில் போராட்டம் நடந்தது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டின் அடையாள உரிமை மீட்புக்காக தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடத்திய இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டம் அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்தது. ஒவ்வொரு இளைஞர்களும், மாணவர்களும் கட்டுப்பாட்டோடு நடத்திய இந்த அறவழிப் போராட்டம் அரசியல்வாதிகளைக் கூட வியக்க வைத்தது,
அறவழியில் நடைபெற்ற இந்த உரிமைப் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை முதலில் தமிழக அரசு கொண்டுவந்தது. பின்னர் அது நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்துவதற்கு காரணம், அதிமுக அரசு மீது இருந்த வெறுப்புதான். இதனாலேயே அவர்கள், தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்களும், மாணவர்களும் மெரினாவில் நடத்திய இந்த வெற்றிப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், மெரினாவில் காளையின் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.