
ஜல்லிகட்டுக்கு ஆதரவான மாணவர் இளைஞரின் போராட்டகளம் மக்களால் பெரிதும் போற்றப்பட்டது.
ஆனால் மாணவர் போர்வையில் ஊடுருவிய கும்பல் போட்ட ஆபாச கோஷங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரை, முதல்வரை, கட்சி தலைவர்களை ஆபாசமாக விமர்சித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்க தடை விதித்ததையடுத்து இரண்டு ஆண்டுகளாக நடக்காமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லை என்ற உடன் கொதித்தெழுந்த மாணவர்கள் வாலிபர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை தொடங்கி தமிழகம் முழுதும் நடைபெற்ற போராட்டம் காரணமாக மத்திய மாநில அரசுகள் ஆடி போயின.
போராட்டகளத்தில் இருந்த மாணவர்கள் இளைஞர்கள் கட்டுபாட்டுடன் அமைதியாக பொறுப்புடன் நடந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த போலீசாருக்கு உணவு தண்ணீர் பாக்கேடுகள் கொடுப்பது அமைதியாக கோஷங்களை எழுப்பியது, பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகு போராடும் மாணவர்கள் இளைஞர்கள் போல் பல்வேறு கும்பல்கள் உள்ளே புகுந்தன.வெவ்வேறு கோஷங்களுடன் வெவ்வேறு கோரிக்கைகளுடன் இந்த கும்பல்கள் மெரீனா கடற்கரையை ஆக்கிரமித்து கொண்டன.
இந்த குழுக்களில் பிரிவினைவாத குழுக்கள், மத்திய அரசுக்கு எதிரான குழுக்கள், மாநில அரசை விமர்சிக்கும் குழுக்கள், முதல்வரை மட்டும் விமர்சிக்கும் குழுக்கள் என பலவகைகள் இருந்தன.
மூன்றாவது நாளுக்கு பிறகு கோஷங்கள் மாறியது.. ஆபாச அர்ச்சனைகள் தொடங்கியது..
குத்தாட்டம் , தலைவர்களை இழிவு படுத்துவது, கட்சிகளை இழிவு படுத்துவது, சாலைகளை ஆக்கிரமித்து கொண்டது , என பல வேலைகள் நடந்தன.
போராடிய மாணவர்கள் இளைஞர்களே மிரண்டு போகும் அளவுக்கு இவர்கள் கோஷங்கள் காதில் கேட்க முடியாத அளவுக்கு அவதூறாக இருந்தது.
தலைவர்களின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிப்பதும் பெண் தலைவர்களை கொச்சையாக மற்ற தலைவர்களுடன் இணைத்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
மாணவர் போர்வையில் இவர்கள் செயல்பட்டதால் இதை கண்டித்த தலைவர்களை அவமானப்படுத்தும் செயலையும் செய்தனர்.
இதனால் போராட்டத்தை வாழ்த்த வந்த தலைவர்கள் அவமானப்பட்டு திரும்பி சென்றனர்.
போராட்டத்தை வழிநடத்திய ஹிப்ஹாப் ஆதி, லாரன்ஸ், சேனாதிபதி போன்றோர் இதை விமர்சித்து வெளியேறினர்.
போராட்டகாரர்கள் போர்வையில் இருந்த சமூக விரோதிகள் அவதூறு வீடியோக்கள் புனையப்பட்ட வீடியோக்கள் சமூகத்துக்கு எதிராக வதந்திகளை பரப்பும் வீடியோக்களை வெளியிட்டனர்.
இதே போன்று போராட்ட களத்தில் இருப்பவர்களை அவர்களுடனே இருக்கும் சிலர் விளையாட்டாக வீடியோ எடுத்து வெளியிட்டது அவர்களுக்கே வினையாக முடிந்துள்ளது.
இவ்வாறு வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் இளம்பெண் சில வாலிபர்களுடன் சேர்ந்து கொண்டு கொச்சையாக பேசுவது காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு ஆபாசமாக உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் கருப்பு உடையணிந்த ஒரு இளம்பெண்ணும் அரசியல் தலைவர்களை ஆபாசமாக விமர்சித்து கோஷமிடலாம் என்று சிரித்தபடி ஆபாசமாக கோஷமிட்டு பயிற்சியளிக்க்கின்றனர்.
ஆபாசத்தின் உச்சத்தை திட்ட வாசகங்களை கேட்ட அந்த இளம்பெண் இது போதாது இன்னும் மோசமாக வேண்டும் என்று கேட்பதும் அந்த வீடியோவில் உள்ளது.
தற்போது இந்த வீடியோவில் இருக்கும் காட்சிகளை வைத்து சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற சைபர் க்ரைம் போலீசார் வீடியோவில் இருப்பவர்களை தேடி வருகின்றனர்.
அமைதியாக போராடிய மாணவர்கள் மத்தியில் இது போன்ற சமூக விரோத கும்பலும் இருந்தன என்பதே இந்த வீடியோ மூலம் நிரூபணம் ஆகிறது.