சென்னை வன்முறை - உருளும் கமிஷனர் தலை

 
Published : Jan 25, 2017, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
சென்னை வன்முறை - உருளும் கமிஷனர் தலை

சுருக்கம்

சென்னையில் நடந்த கலவரம் , கோவை கலவரம் இரண்டிலும் கமிஷனர்களின் அணுகுமுறை அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளரே அதிருப்தி அடைந்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருத்தர் வந்து கெடுத்தார் , ஒருவர் வராமல் கெடுத்தார் இதுதான் இப்போதைய போலீசார் மத்தியில் டாப் ஸ்பீச். அது என்ன வந்து கெடுத்தார் வராமல் கெடுத்தார் என்று போலீசாரிடம் நாம் கேட்டோம். என்ன சார் இது கூட தெரியாமல் போலீஸ் செய்தியாளராக இருக்கிறீர்கள் என்று கிண்டலடித்தவர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.

வந்து கெடுத்தவர் யார் என்றோம். அவர்தான் கோவை கமிஷனர் சார் , அவரே எல்லா இடத்திலும் இழுத்து போட்டுக்கொண்டு வேலை செய்ய மற்றவர்கள் கருத்து கேட்கப்படாமலும் , போலீசார் போராட்டக்காரர்கள் மதிக்கப்படாமல் கோவை போராட்டம் சிக்கலை சந்தித்தது. 

வராமல் கெட்டவர் யார் என்றோம்...

சார்,  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் இளைஞர் போராட்டத்தில் இன்று தமிழக அரசின் மண்டை   உருள்வதற்கும், ஊர் முழுதும் தூற்றுவதற்கும் , தேசிய மனித உரிமை ஆணையமே நோட்டீஸ் அனுப்பவும் , மாநில மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை நடத்துவதற்கும், மக்கள் நலக்கூட்டணியினர் உண்மை கண்டறியும் குழு அமைக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்ட பெருமைக்கு சொந்தக்காரர் எங்கள் கமிஷனர் ஜார்ஜ் தான் அந்த வராமல் கெடுத்தவர் என்றனர்.

சென்னையே 6 நாட்கள் முடங்கி போனது. 7 ஆம் நாள் பெரும் கலவரம் ஆனால் அவர் அலுவலகத்தை விட்டே வெளியே வரவில்லை. காமிரா மூலம் கண்காணித்து உத்தரவுகளை பிறப்பித்தார்.

அரசின் சட்ட ஒழுங்குக்கு பொறுப்பேற்க வேண்டிய தலைமை பதவியில் உள்ள கமிஷனர்  சென்னையில் மாணவர் போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர் இளைஞர் மத்தியில் போலீசாரும் தொடர்ந்து அங்கேயே கிடக்க , உயர் அதிகாரிகள் மாணவர்கள் இளைஞர்களிடையே பல சுற்று பேச்சு வார்த்தை நடத்திய போதும் , துணை ஆணையர் அந்தஸ்த்தில் உள்ள பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்கள் அவமானத்தை தாங்கி பல முறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் தூதுவராக அறிக்கைகளை படித்தார். 

ஆனால் சென்னையின் போலீஸ் கமிஷனர் இரண்டே முறை வெளியே வந்தார். விவேகானாந்தர் இல்லத்தின் மீது ஏறினார். பைனாகுலரில் பார்த்தார். சென்றுவிட்டார் என்கின்றனர்  போலீசார். இதை விமர்சித்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பைனாகுலர் கமிஷனர் என்று கூறி அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை காவல்துறை எத்தனையோ கமிஷனர்களை பார்த்துள்ளது சார் , ஆனால் இது போன்று போலீசாரையே சோர்வடைய வைக்கும் கமிஷனரை பார்த்ததில்லை என்றார் ஒரு எஸ்.ஐ. இது என் கருத்து மட்டும்மல்ல சார் இந்த 7 நாட்களும் வெயில் , பனி என மாணவர்களுடன் வாடிய எல்லா போலீசாரும் அந்த எண்ணத்தில் தான் உள்ளனர் என்றார்.

கமிஷனர்கள் விஜயகுமார் , நட்ராஜ் , முத்துகருப்பன், ராதாகிருஷ்ணன் ,டி.ராஜேந்திரன், சேகர் ,  டி.கே.ராஜேந்திரன் , திரிபாதி போன்றோர் மற்றவர்களிடம் பேசுவர். கேள்விகளை எதிர்கொள்வர். பத்திரிக்கையாளர்களை சந்திப்பார்கள்.

ஆனால் கமிஷனர் ஜார்ஜ் மட்டுமே தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திகொண்டு அதற்குள் இருப்பது, அதற்கு ஏற்ற ஆட்களுடன் பேசுவது என்று இருந்தார். போலீசார் விரும்பாத அதிகாரியாக இருப்பது பல அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. 

காரணம் போலீசாருக்கு சங்கம் கிடையாது. அவர்களின் குறையை மேலதிகாரி குறிப்பாக கமிஷனர் தான் காது கொடுத்து கேட்க வேண்டும். அரசாங்கத்திடம் சொல்லி வாங்கித்தர வேண்டும். ஆனால் அதில் ஜார்ஜ் தனது கடமையை நிறைவேற்றினாரா என்றால் ஏமாற்றம் தான் சார் என்றார் அந்த எஸ்.ஐ.

சரி அது எங்கள் நிர்வாக விஷயம் ஆனால் சென்னை இதுவரை சந்திக்காத ஒரு பிரச்சனையில் சாதாரண அதிகாரி கூட சாலையில் நிற்கும் போது கமிஷனர் நேரில் ஆய்வு செய்தால் தானே அவருக்கும் நிலைமை தெரியும், காவலர்களுக்கும் உற்சாகம் இருக்கும். 

வன்முறை வெடித்த அன்றும் போராட்டக்காரர்களை சரியாக கையால்வதில் போட்ட குளறுபடியான உத்தரவுகள் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் கொளுத்தப்பட்டது , ஏராளமான வாகனங்கள் கொளுத்தப்பட்டது என்கின்றனர்.

சாதாரணமாக அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் போராட்டம் வீரியமானவுடன் அப்புறப்படுத்தியதால் ஏகப்பட்ட கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டியதாச்சு. ஒன்று தெரியுமா போராட்டத்தில் அதிகம் காயப்பட்டது போலீசார் . 

எரிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது போலீசார் வாகனங்கள். ஆனால் என்ன செய்வது. சில போலீசாரின் அராஜக செயல்களே திரும்ப திரும்ப விமர்சிக்கப்படுகிறதே தவிர இதை யார் பார்த்தது என்றார்.

சென்னையின் வன்முறையை சரியாக கையாலவில்லை என்று மேலிடமே கமிஷனர் ஜார்ஜ் மீது கடுப்பில் இருப்பதாக கூற மறுபுறம் இன்னொரு தகவலை சொல்லி நம்மை திடுக்கிட வைத்தார் நண்பர் ஒருவர்.

ஏன் சார் போராட்ட களத்தில் இத்தனை அமைப்புகள் ஊடுருவியதே உளவுத்துறை என்ன செய்தது. கடைசி நாளுக்கு முந்தய நாட்கள் போரட்டக்காரர்கள் பெயரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை உளவுத்துறை கண்டு உஷார் படுத்தியதா? 

மீனவ மக்களை யார் திரட்டியது. தானாக வந்தார்களா? கொண்டுவரப்பட்டார்களா? கடற்கரையில் உள்ள போராட்டக்காரர்கள் கடலை நோக்கி செல்வார்கள் என்பது சாதாரண கான்ஸ்டபிளுக்கு கூட தெரியும் , உளவுத்துறையும் பிற துறைகளும் என்ன செய்தார்கள், கோஸ்டல் கார்டு எங்கே போனார்கள்.

கடல் பக்கமிருந்து அரண் போட்டு ஏன் போராட்டக்காரர்களை வெளியேற்ற வில்லை  ,  உடனே மீனவ கிராம பெண்கள் எப்படி அணி அணியாக கலந்தார்கள், சென்னை முழுதும் போராட்டம் எப்படி பரவியது. போராட்டம் நடக்கும் இடத்துக்கு சில நூறு மீட்டர் தொலைவு உள்ள காவல் நிலையமே கொளுத்தப்பட்டது எப்படி . 

போராட்டம் முடிவுக்கு வர உள்ளது. போலீசார் தடியடி நடத்தலாம் என அவர்கள் தெளிவாக இருக்கும் போது இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் , அரசுக்கு ஆகாதவர்கள் வன்முறையை தூண்ட முயற்சிக்கலாம் என்பதை ஏன் மோப்பம் பிடிக்க முயலவில்லை என அடுக்கினார்.

கையை தூக்கி கும்பிட்டு சாமி ஆளை விடுங்கள் இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு நகர்ந்தோம். 

டெய்ல் பீஸ்: போராட்டத்தின் குறியே ஓபிஎஸ் தான் என்கிறார்கள். அவருக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்று சிலர் சில முக்கிய தலைகள் பின்னணியில் இயங்கியதே காரணம் என்கின்றனர். என்னமோ போங்க இவர்கள் அரசியலில் உருண்டது சாதாரண போலீசாரின் தலைகளும் , அப்பாவி பொதுமக்களும் தான்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?