
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழகத்தில் நடந்த எழுச்சி போராட்டத்தினால் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அது தலைக்கு மேல் கத்தியாக தொங்குகிறது. தொடர்ந்து வழக்கு , தடை என மீண்டும் பிரச்சனை எழாமல் இருக்க என்னதான் வழி .
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை உச்சநீதிமன்றம் விதித்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மத்திய அரசும் தடை கொண்டு வந்தது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடக்காத நிலையில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு இல்லை என்று மத்திய அரசு கைவிரித்தது.
இதனால் ஆவேசமுற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் , இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகமே ஸ்தம்பித்தது. மாணவர்கள் , இளைஞர்கள் போராட்டத்தை கண்டு இறங்கி வந்த மாநில , அரசும் மத்திய அரசும் அவசர சட்டத்தை கொண்டு வந்தன.
இந்த சட்டத்தை சுற்றுச்சூழல் , சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் வழிப்படுத்தி ஜனாதிபதிக்கு அனுப்ப அது சட்டமானது. பின்னர் அது சட்டசபையில் அவசர சட்டமாக தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.
அவசர சட்டம் என்றாலும் இதுவும் சட்டரீதியில் முறையாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான். மத்திய அரசின் சுற்றுசூழல் , சட்டம் , உள்துறை அமைச்சகங்கள் இணைந்து கொண்டுவரப்பட்ட சட்டம். ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றபின்னர் முறையாக ஆளுனரால் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சட்டம் இயற்றப்பட்டாலும் அது உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கும் , தடைக்கும் உட்பட்டதே. சகலவிதமான பாதுகாப்பு அம்சங்களுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்த இடைக்கால மனுக்கள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பது கேள்விக்குரியே.
மறுபுறம் மத்திய அரசின் அறிவிக்கை வாபஸ் பெற்றதன் மூலம் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு ஜனாதிபதி பின் ஒப்புதல் அளிக்க தடையேதும் இருக்காது.
அப்படி அளிப்பதற்கு வசதியாகத்தான் மத்திய அரசு தனது 2016 ஆண்டு ஜனவரி தடை சட்ட அறிவிக்கையை வாபஸ் வாங்கியுள்ளது.
இதன் பின்னரும் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு பாதுகாப்பு வேண்டும். அதன் மீது யாரும் வழக்கு தொடர கூடாது என்று உறுதி கிடைக்க இந்த சட்டம் மத்திய அரசின் பொதுப்பட்டியல் அட்டவணை 9 ல் இணைக்கப்பட வேண்டும்.
இது மட்டுமே தீர்வு. அதை நோக்கிய பயணத்தை துவக்க மத்திய அரசுக்கு மாணவர்கள் போராட்டம் அழுத்தத்தை கொடுத்தது. மேலும் அழுத்தத்தை மாநில அரசு தர வேண்டும்.