போலீசை ஓபிஎஸ் ஏவவில்லை : அப்படியென்றால் வேறு யார் ?

 
Published : Jan 25, 2017, 11:17 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
போலீசை ஓபிஎஸ் ஏவவில்லை : அப்படியென்றால் வேறு யார் ?

சுருக்கம்

ஜல்லிக்கட்டு வேண்டி, தமிழக மாணவர்களும், இளைஞர்களும் , உலகமே வியந்து பார்க்கும் வகையில், ஒரு வாரகாலமாக அறவழியில் போராட்டங்களை நடத்தி  வந்தனா். 

ஆனால் சுமூகமாக முடிவடைய வேண்டிய பிரச்சனையில், போலீசார் திடீரென தடியடி நடத்தி, வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்தை பார்க்கும்போது, காவல்துறை இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கேள்வி பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. 

விவசாயம் பாதிப்பு,  விவசாயி உயிாிழப்புகள், மீத்தேன் திட்டம், காவேரி மற்றும்  முல்லைப்பொியாறு பிரச்சனை, மணல் காெள்ளை, குடிக்க தண்ணீா் கிடைக்க வழியில்லை.

ஆனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, காேக் உள்ளிட்ட  நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை   உறிஞ்சும் நிலை மற்றும் ஒவ்வொருவாின் தனிப்பட்ட குமுறல்கள் ஜல்லிக்கட்டு பிரச்சனையை மையமாகக் காெண்டு, அதற்கு தீா்வுகாண தமிழகம் முழுவதும் மாணவா்களால் தன்னெழுச்சிப் போராட்டமாக எழுந்தன.

சுமார் ஒரு வார காலம் மாணவர்கள், இளைஞா்கள், பாெதுமக்கள் என மெரினாவில் போராடி வந்த நிலையில், முதல் சில நாட்கள் மந்தமாக இருந்த தமிழக அரசு போராட்டத்தின் தீவிரத்தை பார்த்த பிறகு சுறுசுறுப்படைந்தது. முதல்வர் பன்னீர்செல்வமே நேரடியாக டெல்லி சென்று பிரதமர் மோடியிடம், ஜல்லிக்கட்டு சட்டத்தின் அவசியத்தை எடுத்துக்கூறினார்.

மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மோடி கூறிய வாக்குறுதியை நம்பி, தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி, அதை ஒரே நாளில் மத்திய அரசின் 3 துறை அமைச்சகங்களிடம் ஒப்புதல் பெற்றதோடு, குடியரசு தலைவர், ஆளுநரிடமும் ஒப்புதல் பெற்றது. இப்படி அதிவேகமாக ஒரு மாநிலம் பெற்ற அவசர சட்ட ஒப்புதல், நாட்டிலேயே இதுவாகத்தான் இருக்கும். இது முதலமைச்சா் பன்னீா்செல்வத்துக்கு ஒரு இமேஜை ஏற்படுத்தி தந்ததாகவே கருதப்படுகிறது.

எனவேதான் தனது இமேஜை உயர்த்திக்கொள்ள அலங்காநல்லூரில் தானே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக கூறினார் பன்னீர்செல்வம். ஆனால் நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்ட களம் அடுத்த நகர்வுக்கு சென்றதால் அவர் தோல்வி முகத்தோடு திரும்பினார். ஆனால் சட்டசபையில் திங்கள்கிழமை அன்றே சட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக அவர் உறுதியளித்தார்.

இப்படி சட்டசபையில் சட்டம் நிறைவேறிவிட்டால், அதன்பிறகு போராட்டக்காரர்களுக்கு கோரிக்கையே மிஞ்சியிருக்காது. திங்கட்கிழமை அன்றே அமைதியாக கலைந்திருப்பர். ஏன்.. வெற்றி விழா கொண்டாடியும் இருப்பர். இதனால் மாணவர்களுக்கு கண்டிப்பாக முதல்வர் பன்னீர்செல்வம் மீது ஒரு மரியாதை பிறந்திருக்கும்.

ஓபிஎஸ் இல்லை என்றால் யாாிடம் இருந்து வந்தது கட்டளை?

கடந்த திங்கட்கிழமை, சட்டமன்றத்துக்கு முதல்வரும், கவர்னரும் செல்லும்போது எதுவும் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கடற்கரையில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்படி குவிக்கப்பட்டிருந்த போலீஸாருக்கு, திடீரென விடியற்காலையில் ஒரு தகவல் வந்திருக்கிறது. ‘கடற்கரையில் இருக்கும் கூட்டத்தை உடனே அப்புறப்படுத்துங்க’ என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை பிறப்பித்தவர் காவல் துறை உயரதிகாரி ஒருவர். அவருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறாராம்.

இப்படி எல்லோருமே அவரவர்களுக்கு வந்த உத்தரவை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த உத்தரவின் அடிப்படையில்தான் காவல் துறை, காலையில் ஏவல் துறையாக மாறியது.

கூட்டத்தினர் மீது காவல் துறை கை வைத்ததும் அது காட்டுத்தீயாக பரவியது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. ஆங்காங்கே பொதுமக்களும் மாணவர்களும் மறியலில் உட்கார்ந்துவிட்டனர். சில இடங்களில் காவல் துறை வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவல் துறையினரே கலவரத்தை உருவாக்க தீ வைத்தார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் கிளம்பியது.

"எல்லாமே நல்லபடியாக போய்ட்டு இருந்த சமயத்தில் எப்படி வந்தது இந்த குளறுபடி? காவல் துறையை இயக்கியது யார்?" என்ற கேள்வி  அனைவாின் மனதிலும் எதிராெலிக்கிறது.

ஆனால் திடீர் தடியடி என்பது முதல்வரின் இமேஜை சரிவடைய செய்துள்ளதாகவே கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்படி அரசியலில் ஸ்கோர் செய்ய வேண்டிய நேரத்தில், பன்னீர்செல்வம் எதற்காக காவல்துறையை ஏவியிருப்பார்? அதற்கான அவசியமே எழவில்லையே? அப்படி ஏவியிருந்தால் போராட்டம் தொடங்கியது முதலே அதை ஏவியிருக்கலாமே?

அப்படியானால் போலீஸ் தடியடியால் பன்னீர்செல்வம் இமேஜ் சரிவடைந்தால் யாருக்கு லாபம்? மாணவர்கள் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு சட்டத்தை முதல்வர் முயற்சி எடுத்து நிறைவேற்றியுள்ளார்.

ஆனால், அதை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு போலீசாரின் லத்திகளும், கல் வீச்சுகளுமே நமது கண்முன் வந்து அச்சமூட்டுகிறதே. இதனால் பன்னீர்செல்வம் எடுத்த முயற்சி அத்தனையும் அவரது அரசியல் செல்வாக்குக்கு பயனற்று போனதை போன்ற தோற்றம் வருகிறதே. இந்த தோற்றம் உருவாவது யாருக்கு லாபம்? கண்டிப்பாக பன்னீர்செல்வம் இந்த தடியடியை விரும்பியிருக்க வாய்ப்பில்லை.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றி, மக்களிடம் நல்ல பெயர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட பன்னீர்செல்வம் ஒன்றும், அரசியல் தெரியாத புதுமுகம் கிடையாது. அப்படியானால் அவருக்கு கிடைக்க வேண்டிய நற்பெயரை கெடுக்க நினைத்தவர்கள் யார்? விஷமிகள் கலவரம் நடத்தி, தீ வைத்திருந்தால்கூட லாஜிக் இடிக்காது. போலீசாரே தீ வைத்துள்ளதாக வெளியான வீடியோக்களை பார்க்கும்போது முதல்வருக்கு எதிராக ஏன் காவல்துறையே நடந்து கொண்டது என்ற கேள்வி எழுகிறது.

அப்படியானால், காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? முதல்வருக்கு கெட்டபெயரை ஈட்டித்தர உள்ளேயே இருந்து கொண்டு, காவல்துறையை தப்பாக பயன்படுத்தியது யார்? என்ற இரு கேள்விகளும் சாமானியர்களுக்கும் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு உரிய விசாரணை நடத்த வேண்டிய அவசியம், அரசுக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?