
இனி தமிழ்நாட்டில் வாழவே முடியாது என எத்தனையோ ஆயிரம் பேர் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டனர். காரணம், தமிழகத்தின் வாழ்வாதார தொழிலான விவசாயம், முற்றும் முழுவதுமாக முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், உற்பத்தியாகாத பல்லாயிரம் ஆண்டு கால இயற்கை செல்வங்களான மண், மணல், கல் போன்றவையை அடியோடு சுரண்டி பகாரசூர ஆட்டம் போட்டுவிட்டனர் முன்னாள் , இன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் மணல் மாபியாக்கள்.
இவற்றை தடுத்து நிறுத்தாவிட்டாலும் பராவாயில்லை… இவற்றை எதிர்த்து கேள்வியாவது, யாராவது கேட்க முடியுமா…? இவற்றை எதிர்த்து கேள்வியாவது யாராவது கேட்பார்களா..? என கோடிக்கணக்கனோரின் எண்ணங்களில் அலையாய் அடித்து கொண்டிருந்த உள்ள குமுறலை லட்சக்கணக்கானோர் முன்னிலையில் பொட்டென போட்டு உடைத்துவிட்டார் சீருடை பணியாளரான ராமநாதபுரத்தின் மாயழகு.
நாடு நன்றாக இருக்க வேண்டும், மக்கள் நன்றாக இருக்க வேண்டும், விவசாயத்துக்கு உயிரூட்ட வேண்டும். அன்னிய பொருள்களை ஒழிக்க வேண்டும் என்ற பொது சிந்தனையில் உள்ள சில கோடி பேரின் எண்ணத்தை பொளேரென வெளிப்படுத்தியதால், ஒரே நிமிடத்தில் ஹீரோவாகிபோனார் மாயழகு.
அனைத்துக்கும் ஹைலைட்டாக ஏனோ, தானோ என எதையும் உளறி கொட்டவில்லை மாயழகு. ஒரு கை தேர்ந்த சிந்தனையாளர்போல, தமிழகத்தின் நடப்பு விஷயங்களை புட்டு புட்டு வைத்தார். இது லட்சக்கணக்கான மக்களின், எண்ண ஓட்டமே தவிர, ஒற்றை மாயழகுவின் கருத்து மட்டுமல்ல.
இனியாவது, விழித்து இருப்போம். இயற்கையையும் விவசாயத்தையும் காப்போம்.
சமூக அக்கறையுடன் www.newsfast.in