
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி,
நொச்சிக்குப்பம், நடுக்குப்பம், அயோத்தியா குப்பம் மீனவ கிராம மக்களை போலீசார் மிரட்டி வருகின்றனா்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி 7 நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில்
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நேற்று
முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் நொச்சிக்குப்பம்,
நடுக்குப்பம், அயோத்தியா குப்பம் மீனவ கிராம மக்களும், போலீசாரின் காட்டுமிராண்டி
தனத்தைக் கண்டித்து, மாணவா்களுக்கு ஆதரவாக
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் திடீா் தடியடி சம்பவத்தால், சென்னையின் சில இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெற்றன.
நடுக்குப்பத்தின் சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின.
போலீசாரே வாகனங்களுக்கு தீவைத்தும், சேதப்படுத்தியும், பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதும்
சமூக வலைதளங்களில்வைரலாக பரவி வருகின்றன.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவியதாகக் கூறி, வீட்டில் உள்ள
ஆண்களை பிடித்துச் செல்ல இரவு நேரத்தில் போலீசார் வருவதாக நடுக்குப்பம் பகுதி பெண்கள் புகார்தெரிவித்துள்ளனர். போலீசாருக்குப் பயந்து அப்பகுதி ஆண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று
விட்டதாகவும், வீட்டில் ஆண்கள் இல்லாமல் தங்களுக்கு
பாதுகாப்பு இல்லை எனவும் அவர்கள்கூறுகின்றனர்.
போலீசாருக்கு பயந்து விடிய விடிய தூங்காமல் நடுக்குப்பம் மக்கள் பீதியில் இரண்டாவது
நாளாக வீடுகளின் வெளியிலேயே அமர்ந்திருந்தனர்.
தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார், தங்களை பயமுறுத்துவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் இந்த போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை
ஆணையத்தை நாட இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்