
கோவை மாவட்டத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குந்து அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விழுந்ததில் கிளினர் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உடுமலை அருகே பெதப்பம்பட்டி உப்பாறு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. நேற்று அதிகாலை பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் நோக்கி கன்டெய்னர் சரக்குந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கண்டெய்னர் சரக்குந்தை பாலக்காட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) ஓட்டிச் சென்றார்.
பெதப்பம்பட்டி தரைப்பாலம் அருகே சரக்குந்து சென்றுக் கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த உப்பாறு ஓடையில் கவிழ்ந்தது. இதில் சரக்குந்தின் கிளினராக வந்த பாலக்காட்டை சேர்ந்த திருமலை என்பவரின் மகன் சண்முகம் (42) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் குடிமங்கலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குடிமங்கலம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.