
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய அலங்காநல்லூர் பொது மக்கள்… இன்று ஜல்லிக்கட்டு நடக்குமா?
உச்ச நீதிமன்ற விதித்த தடை காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாவில்லை. இதனால் கொதித்தெழுந்த இளைஞர்களும், மாணவர்களும் கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இவர்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருவதால், அதன் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அதில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்தார்.அதன்படி இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியானதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்படும் வரை, வாடிவாசலை விட்டு விலக மாட்டோம் என்றும், ஜல்லிக்கட்டை நடத்த விட மாட்டோம் என அலங்காநல்லூர் பொதுமக்கள், இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.
உள்ளூர் மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் யாரும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அலங்காநல்லூர் வாடிவாசலை விட்டு, விலகாமல் மக்கள் அங்கேயே கூடியுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எந்நேரத்திலும் போலீஸ் தடியடி நடத்தியோ, கைது செய்தோ கூட்டத்தைக் கலைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
சென்னை மெரினா, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வஉசி மைதானம், திருப்பூர்,ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் இதற்கு நிரந்தர தீர்வாகாது எனவும் நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழக அரசும், நடத்தவிடக்கூடாது என்று மாணவர்களும் பிடிவாதமாக இருப்பதால் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
.