சீறும் சிறப்புமாக நடந்த முனியாண்டவர் கோவில் சல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 21 பேருக்கு தழும்பு...

 
Published : Apr 12, 2018, 07:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
சீறும் சிறப்புமாக நடந்த முனியாண்டவர் கோவில் சல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 21 பேருக்கு தழும்பு...

சுருக்கம்

jallikattu held in muniyaandavar temple 21 injured for bulls attack...

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முனியாண்டவர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி நடந்த சல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்து தழும்பை நினைவுச் சின்னமாக பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இராப்பூசலில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நடக்கும் பங்குனி திருவிழாவையொட்டி சல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்தாண்டும் பங்குனி திருவிழாவையொட்டி சல்லிக்கட்டை நடத்த விழாக்குழுவினர், மக்கள் முடிவு செய்து இதற்காக வாடிவாசல் அமைப்பது, பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான இடம், காளைகள் வெளியேறும் பகுதியின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தன. 

இந்த முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நேற்று முன்தினம் பார்வையிட்டு சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று சல்லிக்கட்டு நடைபெற்றது. 

இந்த சல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் வாடிவாசலில் இருந்து புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 977 காளைகளும் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை 211 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் திமிரிக்கொண்டு மாடுபிடி வீரர்களை தூக்கி வீசின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை பக்கத்தில் நெருங்க கூட விடவில்லை. இதனை மக்கள் கண்டு இரசித்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் பாலு (25), மணிகண்டன் (28), கார்த்திக்  (20), வினோத் (28), கௌதமன் (25), பார்வையாளர்கள் கருப்பையா (21), சடையன் (52), செல்வம் (25), செல்வராஜ் (50) உள்பட 21 பேர் காயமடைந்தனர். 

இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 7 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பிளாஸ்டிக் நாற்காலிகள், குடம், மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

சல்லிக்கட்டை இராப்பூசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள், இளைஞர்கள் கண்டு ரசித்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. 2.18 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..