
மதுரை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகோ – ஜியோ அமைப்பினர் போராட்டம், சாலை மறியல் என்று மதுரையே மிரளும் வகையில் போராடினர். இவர்களுக்கு ஆதரவாக ஓய்வுப் பெற்ற அனைத்து அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போராடினர்.
தமிழகம் முழுவதும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டு தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.
இந்தப் போராட்டம் மதுரை மாவட்டத்திலும் அரங்கேறியது. மதுரையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ அமைப்பினைச் சேர்ந்தவர்கள் நேற்று திரண்டனர்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், சந்திரன், சுப்பையன், நாகராஜன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று திருவள்ளுவர் சிலை முன்புள்ள பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் போராட்டக்காரர்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 230 பெண்கள் உள்பட 703 பேரை காவலாளர்கள் வலுகட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓய்வுப் பெற்ற அனைத்து அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்
மாவட்டத் தலைவர் தமிழரசன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 61 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.