
திருநெல்வேலி
வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
"புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்;
21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும்;
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்;
சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அரசுப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 21-ல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய மண்டலக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி ஊழியர்களின் சங்கத் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலர் மனோகரன்,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் மூ. மணிமேகலை, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மகளிரணி செயலர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் என். குமாரவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் சேகர், தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்க பொதுச்செயலர் கனகராஜ், "மூட்டா' மாநில பொதுச்செயலர் நாகராஜன், மாநிலத் தலைவர் சுப்பாராஜ்,
தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொருளாளர் அம்பை கணேசன், கணினி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் செல்வகுமார், வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எம். குருச்சந்திரன், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செ. பால்ராஜ்,
பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெ.அ.அல்லாபிச்சை, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர்கள் தூத்துக்குடி கனகராஜ், கன்னியாகுமரி பகவதியாபிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வீ. பார்த்தசாரதி வரவேற்றார். கூட்டத்தின் இறுதியில் வருவாய் அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சோ.பால்துரை நன்றித் தெரிவித்தார்.