
திருநெல்வேலி
தமிழகத்திலேயே தேர்வு மையத்தை பெற்றுத்தருவதை விட்டுவிட்டு ரூ.1000 கொடுப்பது வெட்ககேடானது என்று ‘நீட்‘ தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்ற மாணவியின் தந்தை ஒருவர் ஆவேசமாக கேட்டார்.
பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவ – மாணவிகள் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் சேருவதற்கு மத்திய அரசு சார்பில் ‘நீட்‘ தேர்வு எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான ‘நீட்‘ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழக மாணவர்களில் சிலருக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கில் பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததற்கு உயர்நீதிமன்றம் முதலில் தடை விதித்தது. ஆனால், இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு உச்ச நீதிமன்றம், "பிற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை மாற்ற முடியாது, அந்த மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும்" என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 160–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் பகுதிகளிலும், ஒருசில மாணவர்களுக்கு வேறு மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த மாணவ – மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக பெற்றோருடன் நேற்றே கேரளா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். விரைவு இரயில்கள் மற்றும் விரைவு பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் உடனடியாக நிரம்பிவிட்டன.
இதனையடுத்து திருச்சியில் இருந்து கோவில்பட்டி, நெல்லை வழியாக திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி விரைவு இரயிலில் பயணம் செய்வதற்கு முடிவு செய்தனர். அவர்கள் நேற்று காலை திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்ட இன்டர்சிட்டி விரைவு இரயிலில் பயணம் செய்தனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதும் சக மாணவர்களுடன் நேற்று காலை கோவில்பட்டி இரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் இந்த இரயிலில் ஒட்டுமொத்தமாக ஏறி பயணம் செய்தனர்.
இதே இரயிலில் நெல்லை மற்றும் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மாணவ – மாணவிகளும் பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் நேற்று மதியம் நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் மதியம் 12.30 மணிக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
இதுதவிர எர்ணாகுளத்துக்கு செல்வதற்காக மாணவ – மாணவிகள் அரசு பேருந்துகளில் ஏறி செங்கோட்டை வழியாக பயணம் செய்தனர். அவர்களுடன் பெற்றோரும் உடன் சென்றனர். தற்போது திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்றுள்ள மாணவ – மாணவிகள் அந்தந்த பகுதிக்கு சென்ற உடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள தேர்வு மையங்களை நேரில் சென்று பார்க்க உள்ளனர்.
பின்னர், அந்த மையம் அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். நாளை தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டிய நேரத்துக்கு முன்னதாக விடுதியில் இருந்து புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதுதவிர ஒருசில மாணவர்கள் தங்களது சொந்த கார் அல்லது வாடகை கார்களில் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு செல்கின்றனர். ஒருசிலர் நேற்றே காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால் மாணவ – மாணவிகள் மற்றும் பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், இது தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து இரயிலில் பயணம் செய்த மாணவி ஒருவர், "பிளஸ்–2 தேர்வு முடித்து ‘நீட்‘ தேர்வு எழுவதற்கு விண்ணப்பித்திருந்தோம். குறிப்பிட்ட மாணவ – மாணவிகளுக்கு மட்டும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்து உள்ளனர். எங்களுக்கு இது மிகவும் சிரமமாக உள்ளது. பொருட்செலவு, கால விரயம் மற்றும் மன உளைச்சலும் ஏற்படுகிறது" என்று அவர் கூறினார்.
இதுகுறித்து மாணவர் ஒருவர், "எங்களுக்கு நீட் தேர்வு மையம் கேரளாவில் அமைக்கப்பட்டு இருப்பது தமிழக மாணவர்களை நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ஏற்படுத்தும் இடையூறாகவே கருதுகிறோம்.
எங்களுக்கு கேரளாவில் அமைந்திருக்கும் தேர்வு மையத்துக்கான இடம் சரியாக தெரியாது, அங்கு மலையாள மொழி பேசும் மக்களிடம் சரியாக விசாரித்து இடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும்.
எனவே, முன்னதாகவே கேரளாவுக்கு புறப்பட்டு செல்கிறோம். அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
ஒரு மாணவியின் தந்தை, "‘நீட்‘ தேர்வு வேண்டாம் என்பதே தமிழக மாணவ – மாணவிகள் மற்றும் பெற்றோரின் ஒட்டுமொத்த கருத்து ஆகும். ஆனால், கடந்த ஆண்டே இந்த தேர்வு மாணவர்களிடம் திணிக்கப்பட்டது.
அந்த கொடுமை முடிந்து, இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தனி மனிதர்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியுள்ளார். ஆனால், மாநில அரசோ இதுபற்றி எந்தவித கவலையும் கொள்ளவில்லை.
மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. மாறாக ‘நீட்‘ தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி அடைவதை தடுக்க சதித்திட்டம் போட்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.
கேரளா மாநிலத்தில் தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத செல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.5000 செலவு ஆகும். மாணவிகள் தனியாக செல்ல முடியாது, பெற்றோர் உதவிக்கு செல்ல வேண்டி உள்ளது. அவ்வாறு செல்லும்போது ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகும். இதை ஏழை மாணவ – மாணவிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது ரூ.1000 முன்பணம் தருவதாக அரசு கூறி உள்ளது. மாணவ – மாணவிகளுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் பெற்றுத்தருவதை விட்டுவிட்டு ரூ.1,000 கொடுப்பது வெட்கக்கேடு.
தமிழகத்துக்கு ‘நீட்‘ தேர்வு வேண்டாம் என்று போராடியவர்களை தற்போது, தமிழகத்துக்கு உள்ளேயாவது ‘நீட்‘ தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டனர்" என்று கூறினார்.