
திருச்சி
திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு 20 மாதம் சிறை தண்டனை விதித்து இரண்டு வருட விசாரணையை முடித்துவைத்தார் நீதிபதி.
திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுக்கோட்டை பிரதான சாலையில் ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் கடந்த 4.7.2016 அன்றிரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது வண்டியை காணவில்லை.
இதுகுறித்து கண்ணன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளை திருடியவரை பிடிக்க காவல் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கிலாப்பூர் ஜீவாநகரைச் சேர்ந்த கருணாநிதி மகன் பாபுஜான் (26) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் திருச்சி கே.கே.நகர் காவலாளர்களால் தேடப்பட்டுவந்த பாபுஜானை, வடகாடு காவலாளர்கள் 28.7.2016 அன்று மற்றொரு வழக்கில் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி கே.கே.நகர் காவல் எல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் பாபுஜான் கைது செய்யப்பட்டார். மேலும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் காவலாளர்கள் மீட்டனர்.
பாபுஜான் மீதான வழக்கு விசாரணை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து நடந்து வந்த வழக்கின் விசாரணை நேற்று முடிந்தது.
விசாரணையின் முடிவில், "மோட்டார் சைக்கிள் திருடியதற்காக பாபுஜானுக்கு 20 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.