திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கட்டுக்கட்டாக பணக்கட்டுகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பணம் எண்ணும் இயந்திரம் மூலம் பணத்தை எண்ணும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வருமான வரித்துறை சோதனை
முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையானது நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். சென்னை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் அவரது வீடுகள், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை, அக்கார்டு நட்சத்திர ஓட்டல், வேளச்சேரியில் உள்ள ஆர்க்கிட் அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா நகரில் உள்ள பரணி பில்டர்ஸ் மற்றும் சிகரம் ஐஏஎஸ் அகாடமி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
இந்த சோதனையின் போது பல்வேறு இடங்களில் கணக்கில் காட்டாத பல ஆவணங்கள் மற்றும் பணக்கட்டுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிக்கிய பணத்தை எண்ணுவதற்காக பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எவ்வளவு பணம் சிக்கியது என எண்ணி வருகின்றனர். மேலும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி இடங்களில் உள்ள அதிகாரிகளையும் விசாரணை செய்தனர். வருமான வரித்துறை சோதனை 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்கள் சோதனை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்