TN TET Exam 2022 : விரைவில் வரும் ஆசிரியர் தகுதி தேர்வு - தேதி எப்போது தெரியுமா ?

By Raghupati RFirst Published Jun 15, 2022, 11:28 AM IST
Highlights

TN TET Exam 2022 : விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் ‘டெட்’ தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒன்றரை மாதங்கள் ஆகியும், தேர்வு தேதியை இன்னும் அறிவிக்காததால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் கடைசியாக 2019-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால், அனைத்து வகையான போட்டிதேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியானது. 

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில், மார்ச் 14 முதல் ஏப் 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப் 18 முதல் ஏப் 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் டெட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

இதையடுத்து விண்ணப்ப பதிவு முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தேர்வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக விண்ணப்பதார்கள் காத்து கொண்டு உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் தேர்வை விரைந்து நடத்தினால் மட்டுமே, விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டதாரிகள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர முடியும் என தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

click me!